“தமிழ் மக்கள் மீதும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ஆளுநர் ரவி போன்றோரை புகழ்வதற்கு தங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், தமிழ் பண்பாட்டை அழித்தொழிக்க முயற்சிக்கும் ஆளுனருக்கு தங்களைப்போன்ற புகழ் பெற்ற ஆளுமைகள் பயன்படுவது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகமில்லையா?” என ஆளுநரை புகழ்ந்த நடிகர் பார்த்திபனுக்கு விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் பார்த்திபனுக்கு வணக்கம். திரைத்துறையில் தங்களுக்கென புதிய பாதை அமைத்து வெற்றி பெற்றவர். வசனங்களிலும் உரையாடலிலும் சமூக அக்கறையோடும் தமிழ் பண்பாட்டை காக்கும் பொறுப்புணர்வோடும் செயல்பட்டவர்.
அந்த ஒத்த செருப்பு ஒன்றே போதும் தங்களுடைய தனித்துவத்துக்கும் பண்பாட்டுக்கும் சான்று. மிகுந்த நம்பிக்கை ஒளியோடு தமிழ்நாட்டு மக்களை ஈர்த்தவர். ஆனால், நேற்றைய ஆளுநர் மாளிகை விழாவில் பங்கேற்று ஆற்றிய உரை அந்த நம்பிக்கையை நொறுக்கி விட்டது.ஆளுநர் தமிழ் பண்பாட்டை அழகாக பாதுகாக்கிறாரா? அல்லது இழிவு படுத்துகிறாரா? இதே ஆளுநர் மாளிகையில் பல நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில்லை.
அதை திட்டமிட்டே அவமானப்படுத்துகிறார். கடந்த சட்டப்பேரவையிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போதே அவமதித்து வெளியேறியவர் ஆளுநர் ரவி. இதுதான் தமிழ் பண்பாட்டை பாதுகாக்கும் அழகா? அதே போல, “குழந்தை திருமணம் நல்லது.நானும் கூட குழந்தை திருமணம் செய்தவன் தான்” என கடந்த கடந்த மார்ச் 12,2023 அன்று பெருமையோடு பிதற்றினார். இது தமிழ் பண்பாடா? அதே போல, கடந்த அக்டோபர் 4,2023 அன்று சிதம்பரத்தில் தலித்துகளுக்கு பூணூல் போடும் விழாவை நடத்தினார்.
சனாதனத்துக்கு எதிராக புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் செயல்படுவோரை நயவஞ்சகமாக அதிகாரத்தின் மூலமாக ஏமாற்றி பூணூல் அணிவிப்பது தமிழ் பண்பாடா? தமிழ்நாடு என்பதை தமிழகம் என மாற்றி அறிவித்தாரே இது தமிழ்நாட்டு பண்பாடா? இப்படி ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கையும் தமிழ் பண்பாட்டு விரோதப் போக்கையும் ஆதாரங்களுடன் அடுக்கிக்கொண்டே போகலாம்.
தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மக்கள் மீதும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ஆளுநர் ரவி போன்றோரை புகழ்வதற்கு தங்களுக்கு உரிமை உண்டு.ஆனால், தமிழ் பண்பாட்டை அழித்தொழிக்க முயற்சிக்கும் ஆளுனருக்கு தங்களைப்போன்ற புகழ் பெற்ற ஆளுமைகள் பயன்படுவது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகமில்லையா?” என தெரிவித்துள்ளார்.