புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர் : எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா உரை

புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று செவ்வாய்க்கிழமை மானிய கோரிக்கை மீது எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா உரை ஆற்றினார்.

 

அப்போது அவர் பேசியதாவது:-  புதுச்சேரி மாநிலத்திற்கு நீண்ட கால அனுபவம் பெற்றவர் துணைநிலை ஆளுநராக இருக்கிறார். அவருடைய அனுபவத்தை வைத்து பல்வேறு துறைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட சிறப்புக்கூறு நிதி ரூ. 500 கோடி அளவில் நிதி எப்படி கையாளப்பட்டிருக்கிறது என்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உள்ளார்.

 

ஆனால் அந்த ஆய்வில் அவர் கண்டுபிடித்த குறைகள் என்ன?. அவைகள் நிவர்த்தி செய்யப்பட்டனவா என்பது குறித்து இந்த அவைக்கு தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு துறையும் கொள்கை முடிவுகளுக்கும், திட்ட அனுமதிக்காகவும், நிதி ஒதுக்கீட்டிற்காகவும் கோப்புகளை முறையாக செயலாளர், தலைமைச் செயலர், முதல்வர் வழியாக ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

 

அப்படிப்பட்ட நிலையில் ஆளுநர் அலுவலகம் அந்த கோப்புகள் மீது மீண்டும் சந்தேகத்தை கிளப்பி விசாரணை மேற்கொள்வதும், காலதாமதம் ஏற்படுத்துவதும் திட்டச் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாக அமைகிறது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மிகப்பெரிய அவமானம். இச்செயல் களையப்பட வேண்டும்.

 

இந்த அரசு அமைக்கப்பட்டதிலிருந்து சிறப்பு நிதி, ஒன்றிய திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களான விமான நிலைய விரிவாக்கம் – ரூ. 1825 கோடி, புதிய சட்டமன்றம் ரூ. 480 கோடி, சுகாதாரத்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ, 500 கோடி, மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க ரூ. 300, தேசிய பல்கலைக்கழகம் அமைக்க ரூ. 453 கோடி என மொத்தம் ரூ. 5,828 கோடி சிறப்பு நிதியை மாநிலத்தின் தலைமை நிர்வாகி என்ற முறையில் துணைநிலை ஆளுநர் ஒன்றிய அரசை நேரில் அணுகி இத்திட்டங்களை பெற்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இதுதான் அவரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். அப்படி அவர் செய்யும் பட்சத்தில் கடந்த காலத்தில் புதுச்சேரி நலனுக்காக பாடுபட்ட துணைநிலை ஆளுநர்கள் போற்றுவது போல் இவரையும் புதுச்சேரி மக்கள் நினைவில் கொண்டு போற்றுவார்கள்.  பாண்லே நிறுவனத்தில் தேசிய பால்வள வாரியத்துடன் இணைந்து ரூ. 34 கோடியில் ஐஸ்கிரீம் பிரிவு நடத்துவது என்றும் ரூ. 4 கோடியில் 5 பால் குளிரூட்டும் சாதனம் நிறுவுதல் என்றும் பால் உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கும், விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்க உள்ளதாகவும், 75 விழுக்காடு மானியத்தில் கறவை மாடு வாங்குவது என்றும் அறிவித்துள்ளீர்கள்.

 

இவைகளை செய்வதற்கு முன்பு முதலில் பாண்லேவில் இருக்கின்ற நிர்வாக சீர்கேடுகளை களைவது அவசியம். இன்றைய நிலையில் லாபத்தோடு செயல்பட்ட நிர்வாகம் ரூ. 24 கோடி கடனில் தத்தளிக்கிறது. 500 பேர் இயக்கக் கூடிய நிறுவனத்தில் 980 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் இபிஎப், கிராஜூவிட்டி ரூ. 20 கோடிக்கு மேல் பாக்கி உள்ளது. ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து அவர் தலைமையில் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என தெரிவித்தார்.