--- --:--:-- --

அவுரங்கசீப் கல்லறை பிரச்சனை.. நாக்பூரில் வெடித்த வன்முறை..!

2

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அவுரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி வலதுசாரி அமைப்பினர் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. முகலாய மன்னரான அவுரங்கசீப், தனது கடைசி காலத்தில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாழ்ந்து மறைந்தார். அவரது உடல் சாம்பாஜி நகர் மாவட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டு, கல்லறை எழுப்பப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்பது வலதுசாரி அமைப்பினர் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதனிடையே கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்டிரா மாநிலத் தலைவர் அபு ஆஸ்மி, அவுரங்கசீப் ஒரு சிறந்த நிர்வாகி என்று கூறினார்.

 

அவர் பல கோயில்களை கட்டியதாக கூறிய அபு ஆஸ்மி, அவுரங்கசீப் வரலாற்றில் தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.இக்கருத்துக்கு அம்மாநில துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அபு ஆஸ்மி மீது காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. மேலும், அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்தது.

 

குறிப்பாக, அவுரங்கசீப் கல்லறையை அகற்றவில்லை என்றால் பாபர் மசூதிக்கு நேர்ந்த நிலை ஏற்படும் என்று இந்து அமைப்பினர் மிரட்டல் விடுத்தனர். இதன் தொடர்ச்சியாக, அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்பதுதான் மாநில அரசின் விருப்பம் என்று கூறிய அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், அது தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இருப்பதால், சட்டத்திற்கு உட்பட்டுதான் செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.

 

இந்நிலையில், அவுரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி, இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது இரண்டு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக வெடித்தது. ஏராளமான வாகனங்கள் தீக்கிரையான நிலையில், கல் வீச்சில் பலர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்த கூடுதல் காவல் படையினர், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர்.

 

தவறான தகவலால் வன்முறையை வெடித்ததாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் துணை காவல் ஆணையர் அர்சிட் சந்தக் தெரிவித்தார். இதற்கிடையே, அனைவரும் அமைதி காக்குமாறு அறிவுறுத்தியுள்ள மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், வன்முறையைத் தூண்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், பாஜகவின் மத அரசியலால், நாக்பூர் கொழுந்து விட்டு எரிவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

 

இந்நிலையில், நாக்பூரில் மற்றொரு இடத்திலும் வன்முறை வெடித்ததால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவுரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை அடக்குவதற்குள் நாக்பூரின் ஹன்ஸாபூரி பகுதியிலும் கலவரம் மூண்டது. முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள், வாகனங்களுக்கு தீயிட்டு கொளுத்தி, கடைகளை அடித்து உடைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon