ஈசிஆர் கார் சேசிங் வழக்கு: முக்கிய குற்றவாளிக்கு 15 நாட்கள் சிறை
சென்னை ஈசிஆர் வழக்கில் கைதான முக்கிய குற்றவாளியான சந்துருவிற்கு 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஈசிஆர்-இல் நள்ளிரவில் பெண்கள் சென்ற காரை துரத்தி, சாலையின் குறுக்கே காரை நிறுத்தி மறித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கடந்த ஜனவரி 25-ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, சந்தோஷ், தமிழ் குமரன், அஸ்வின் மற்றும் விஷ்வேஸ்வரன் ஆகிய 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த 3 பேரை தேடிவந்த நிலையில், வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்துருவை நேற்று தனிப்படையினர் கைது செய்தனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சந்துருவை அதிரடியாக தட்டித்தூக்கிய காவல்துறையினர், ஈசிஆரில் உள்ள விடுதியில் வைத்து விசாரணை நடத்தினர்.இந்த நிலையில், இந்த வழக்கில் கைதான சந்துரு, சோழிங்கநல்லூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




