திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் பட்டிமன்றம், விளையாட்டு போட்டிகளுடன் பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம்..!
திருப்பூர், தாராபுரம் ரோடு, அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகம் மற்றும் அமைச்சு பணியாளர்கள் சார்பில் பொங்கல் விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு திருப்பூர் மாவட்ட மருத்துவமனை டீன் பேராசிரியர் டாக்டர் ஆர்.முருகேசன் தலைமை தாங்கினார். துணை நிர்வாக அதிகாரி வேல்முருகன் வரவேற்றார்.
இதனைதொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பல்வேறு விதமான கோலங்கள் போட்டு, கரும்புகள் வைத்தும், பெண் பணியாளர்கள் நீல கலரில் சேலைகள் அணிந்தும், ஆண்கள் வேஷ்டி அணிந்தும் தமிழர் பண்டிகையை போற்றும் விதத்தில் பொங்கல் வைத்து வழிபட்டு கொண்டாடினர்.

அப்பொழுது பொங்கலோ பொங்கல் என்று பணியாளர்கள் ஆர்வமாக சத்தமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டனர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு மியூசிக்கல் சேர், லக்கி கார்னர், உறியடித்தல் உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

திருப்பூர் மருத்துவக் கல்லூரி மாணவ,மாணவிகள் சார்பில் பொங்கல் விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் கோலாகலமாக நடந்தது. . தொடர்ந்து கல்லூரி மாணவிகள் பூக்கோலம் போட்டும், கரும்பு வைத்தும், இனிப்பு பொங்கல் வைத்து கொண்டாடினர்.
பின்னர் கலையரங்கில் சமூக ஊடகங்கள் பண்பாட்டை பாதுகாக்கிறதா? சீரழிக்கிறதா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. பாதுகாக்கிறது என்ற தலைப்பில் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவிகள் ஜெயஸ்ரீ, சுஷ்மிதா, அபிநந்திதா ஆகியோரும், சீரழிக்கிறது என்ற தலைப்பில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஜோஸ் மற்றும் முதலாம் ஆண்டு மாணவிகள் ஜுலைகா பாஸிலா, அக்ஷயா பாரதி ஆகியோர் தங்களது வாதங்களை பல்வேறு உதாரணங்களுடன் எடுத்துரைத்தார்கள்.

முடிவில் பட்டிமன்றத்தின் நடுவராக மருத்துவர் பால்ராஜ், சமூக உடகங்கள் பயன்பாட்டில் முறையான வரையறைகள் வகுத்து அது பயன்படுத்தப்படும் வரை நன்மைகள் இருந்தாலும் தீமைகள் அதிகமே! என்று தீர்ப்பளித்தார்.
இதனை தொடர்ந்து கல்லூரி மாணவிகள் மாணவர்ககள் பரதநாட்டியம், சிலம்பாட்டம், வள்ளி கும்மியாட்டம் மற்றும் ஒயிலாட்டம் நடனங்கள் ஆடினர்.பின்னர் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதே போல் நர்சிங் கல்லூரியிலும் பொங்கல் விழா நடந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




