--- --:--:-- --

நாளை எங்கெங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

9

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (27.11.2024) காலை 8.30 மணி அளவில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (28.11.2024) அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

மேலும் இது இலங்கை – திரிகோணமலையிலிருந்து கிழக்கு – வடகிழக்கே சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து தென்கிழக்கே 310 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து தென்கிழக்கே 410 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு – தென்கிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

 

இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி நகரக்கூடும். அதன் பிறகு, மேலும் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை கடலோரப் பகுதிகளில், காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே நாளை மறுநாள் (30-ஆம் தேதி) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

இதனிடையே, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (29.11.2024) ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யும்.அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 

இந்நிலையில், கனமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (29.11.2024) வெள்ளிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon