திமுக-வை முந்திச் சென்று வெற்றி பெற பல பேர் வருவதாகக் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் புகழ் வெளிச்சத்தில் புது வெளிச்சம் தேடும் புற்றீசல்கள் காணாமல் போகும் என நடிகர் விஜயை மறைமுகமாக சாடியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், பட்டம்புதூரில் நடைபெற்ற அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய முதலமைச்சர், ஆட்சி பொறுப்பில் இருந்தபோது மக்களைப் பற்றி கவலைப்படாத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தற்போது கலைஞர் பெயரில் பயன்படாத திட்டங்களை செயல்படுத்துவதாகப் பொய் பரப்புரை செய்து வருகிறார் எனக் கடுமையாக சாடினார்.
திராவிட மாடல் புகழ் வெளிச்சத்தில் புது வெளிச்சம் தேடும் புற்றீசல்கள் காணாமல் போகும் என்றும் த.வெ.க. தலைவர் விஜயை மறைமுகமாக முதலமைச்சர் விமர்சித்தார்.திமுக ஆட்சியில் காமராஜரின் பெயரில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்ட முதலமைச்சர், பெருந்தலைவர் காமராஜரைத் தன்னால் மறக்கவே முடியாது என்று நெகிழ்ச்சிபடத் தெரிவித்தார்.
மேலும், தனது திருமணத்திற்கு வந்து காமராஜர் வாழ்த்தியதை மறக்க முடியாது எனவும் முதல்வர் ஸ்டாலின் நினைவுகூர்ந்தார். காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கருணாநிதி என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
புதிதாகக் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், தனது கட்சி கொள்கைத் தலைவர்களில் ஒருவராக காமராஜரை முன்னிருத்தியிருக்கும் நிலையில், காமராஜரின் சிறப்புகளை குறிப்பிட்டு முதலமைச்சர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.