ஈபிஎஸ் தலைமையில் அதிமுக முக்கிய ஆலோசனை..!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளது.

 

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

 

இக்கூட்டத்தில் பேசக்கூடிய விஷயங்களும், எடுக்கக்கூடிய முடிவுகளும் அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் இருக்கும் எனத் தெரிகிறது. அதிமுகவில் ஈபிஎஸ் தலைமையில் ஒற்றை தலைமை உருவான பின்னர் உறுப்பினர் சேர்க்கை மிக தீவிரமாக நடைபெற்றது. 2 கோடியே 20 லட்சம் பேருக்கு மேல் உறுப்பினர்களாக உள்ள நிலையில், அவர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை கொடுக்கும் பணிகள் மாவட்ட வாரியாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 

இந்த பணிகள், எந்த அளவில் உள்ளன, மாவட்டம் முழுவதும் உறுப்பினர் அட்டையை மாவட்டச் செயலாளர்கள் விநியோகித்துள்ளனரா?, இன்னும் எத்தனை சதவீதம் நிறைவடைய வேண்டியுள்ளது போன்ற விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதுதவிர்த்து, கட்சியின் உட்கட்சித் தேர்தல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. கிளைக் கழக செயலாளர் முதல் பொதுச்செயலாளர் வரையிலான உட்கட்சி தேர்தலுக்கு கட்சி நிர்வாகிகளை தயார்படுத்துவது குறித்தும் மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்படும் எனத் தெரிகிறது.

 

இளைஞர்களை இழுக்கும் வகையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் மாநாட்டை நடத்தி முடித்துள்ளது. இளைஞர்கள் பலர் அதில் பங்கேற்றதையும் அதிமுக தலைமை உன்னிப்பாக கவனித்துள்ளது. இதனால் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் அதிமுக இருக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் டி.ராமகிருஷ்ணன் கூறி உள்ளார்.

 

இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி பணிகளை தீவிரப்படுத்த இருப்பதாகவும், எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் இளைஞர்கள் மற்றும் மகளிருக்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

 

2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு 15 மாதங்கள் உள்ள நிலையில், அதிமுக பல்வேறு ஆலோசனை கூட்டத்தை நடத்தி கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்பாக உட்கட்சி தேர்தலை டிசம்பர் மாதத்துக்குள் முடித்து, பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.