ஸ்டாண்ட் அப் காமெடி டூ ஆன்மிகம்.கைதுக்கு பயந்து ஆஸ்திரேலியா பறந்த மகாவிஷ்ணு?
ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருந்து ஃபவுன்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் ஆன்மீக சொற்பொழிவாளராக மாறிய மகாவிஷ்ணு சென்னை அசோக்நகர் அரசுப் பள்ளியில் ஆற்றிய சொற்பொழிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போன பிறவியில் செய்த பாவங்களே, ஒருவர் கஷ்டப்பட காரணம் என்றும் மாற்றுத்திறனாளிகளாக பிறக்க காரணம் என்றும் கூறியிருந்தார்.
திராவிட மாடல் ஆட்சியில் இப்படி மாணவர்கள் மனதில் மூட நம்பிக்கையை விதைக்கும் வகையில் பேசுவதை ஏற்க முடியாது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அதனை எதிர்த்து கேள்விக் கேட்ட ஆசிரியரையும் அவமதிக்கும் வகையில் நடந்த கொண்டார் மகா விஷ்ணு. மகாவிஷ்ணுவின் இந்த செயல் பெரும் பேசு பொருளாகியுள்ளது.இந்நிலையில் தனது துறையை சேர்ந்த ஆசிரியரை அவமதித்ததை ஏற்க முடியாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் மகாவிஷ்ணு மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மகாவிஷ்ணுவின் சர்ச்சை பேச்சு தொடர்பாக குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மகாவிஷ்ணு மீது சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். மகாவிஷ்ணுவின் பேச்சு மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான வன்செயல் என்றும் புகாரில் தெரிவித்துள்ளனர். மேலும் மகாவிஷ்ணுவை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் மகா விஷ்ணு எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் மகாவிஷ்ணு வெளிநாடு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாவிஷ்ணு தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மகா விஷ்ணு ஆஸ்திரேலியா சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சென்னையில் உள்ள பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை மகா விஷ்ணு என்பவர் பேசியுள்ளார். அப்போது, மாற்றுத் திறனாளி ஆசிரியர், ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். உடனே அந்த நபர், மாற்றுத் திறனாளி என்றும் பார்க்காமல் இழிவுபடுத்தி பேசியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அந்த நபர் பேசும்போது, ஆண்டவனால் நீங்கள் மாற்றுத் திறனாளியாக படைக்கப்பட்டுள்ளீர்கள் என்ற கடுமையான சொல்லை பயன்படுத்தியுள்ளார். மாற்றுத் திறனாளிகளை மனிதநேயத்துடன் பார்க்க வேண்டும். அவர்கள் மனது காயப்படும்படி பேசுவது கண்டனத்திற்குரியது. இப்படி பேசி நபர் அண்மையில் அன்பில் மகேஸ் உள்பட அமைச்சர்களுடன் புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
அரசின் செல்வாக்கு காரணமாக பள்ளிகளில் இவ்வாறு சென்று பேசுவது கண்டனத்திற்குரியது. அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய நபரை பேச அனுமதித்தது எப்படி?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், “தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை அதிகரித்துவிட்டது. நிர்வாக திறனற்ற அரசு சரியான நடவடிக்கை எடுக்காததாலும், காவல்துறைக்கு சுதந்திரம் அளிக்காததாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.
திருச்சியில் அரசு உதவிபெறும் பள்ளியின் தலைமை ஆசிரியரின் மகன், பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை என்ற பெயரில் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. மோசமான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது என்பதற்கு இது ஒரு சான்று” என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில் மகாவிஷ்ணுவின் பேச்சை கடுமையாக விமர்சித்துள்ளார் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளியில் பைத்தியக்காரத்தனமாக பேசும் ஒரு நபரை பார்க்கும் வேதனையாக உள்ளது என பதிவிட்டுள்ளார். மேலும் அதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷையும் டேக் செய்துள்ளார்.
இதனிடையே திருப்பூரில் உள்ள மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




