‘தி கோட்’ படம் வெற்றியடைய நடிகர் விஜய்க்கு அஜித் வாழ்த்து சொன்னதாக இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் அதிகாலை 4 மணி மற்றும் 6 மணிக்கே சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. அதேநேரம், தமிழகத்தில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது.
கோயம்புத்தூர் பிராட்வே சினிமா திரையரங்கில் மட்டும் காலை ஏழு மணிக்கே சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது. இங்கு பிரபலங்கள் திரைப்படத்தை பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. ‘தி கோட்’ திரைப்படம் ரிலீஸை முன்னிட்டு விஜயின் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரவிலிருந்தே ரசிகர்கள் தியேட்டர்களின் வாசல்களில் குவிந்து வந்தனர். தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் ஆரவாரமாக மேள, தாளம் முழங்க திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.சில இடங்களில் விஜய் நடிப்பில் வெளியான பாடல்களை ஒலிக்கச் செய்து, வைப் செய்து விஜய் படத்தை வரவேற்க காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில், ‘தி கோட்’ படம் வெற்றியடைய நடிகர் விஜய்க்கு அஜித் வாழ்த்து சொன்னதாக இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு தனது பதிவில், “எனது அண்ணன் அஜித் தான் ‘தி கோட்’ படம் வெற்றியடைய விஜய் மற்றும் எங்கள் குழுவை வாழ்த்திய முதல் நபர். அதற்கு நன்றி. நாங்கள் அனைவரும் உங்களை நேசிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.