மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000.. தமிழ்ப்புதல்வன் திட்டம் இன்று தொடக்கம்..!

ரசுப் பள்ளிகளில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம், 3 லட்சம் மாணவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாயைப் பெற்று வருகின்றனர். மேலும், முந்தைய ஆண்டை விட கடந்த ஆண்டில் அரசுப் பள்ளியில் படித்த 64 ஆயிரத்து 231 மாணவிகள் கூடுதலாக உயர்கல்வியில் சேர்ந்தனர்.இந்நிலையில், உயர்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.இந்தத் திட்டத்தின் மூலம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1000 பெறுவார்கள் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு 360 கோடி ரூபாயை இந்த ஆண்டில் தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.