--- --:--:-- --

சென்னையில் தொழில் கட்டணம் 35% வரை அதிகரிப்பு..!

1

சென்னை மாநகராட்சியில் வசிப்போருக்கான தொழில் கட்டணம் 35 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல டீக்கடைக்கான தொழில் உரிமம் கட்டணம் 10,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை மாநகராட்சியின் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இதில் புதிதாக ஆணையராக பொறுப்பேற்றுள்ள ஜெ.குமரகுருபரன் முதன்முறையாக பங்கேற்றார். கூட்டம் தொடங்கியதும் மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், மதிமுக கவுன்சிலர்கள் பட்ஜெட் நகலை கிழித்து போராட்டம் நடத்தினர்.

 

72 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக மாடுகளை சாலைகளில் திரிய விடும் உரிமையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட வந்த 5000 ரூபாய் அபராதம், 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக பிடிக்கப்பட்டால் அதன் உரிமையாளருக்கு 10,000 ரூபாய் அபராதமும், மீண்டும் பிடிக்கப்பட்டால் 15,000 ரூபாய் அபராதமாகவும் வசூலிக்கப்பட உள்ளது.

 

மேலும், பராமரிப்பு செலவிற்கு மூன்றாம் நாளில் இருந்து, நாள் ஒன்றிக்கு 1000 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது.இதேபோல மாநகராட்சி பகுதிகளில் பணியாற்றுவோருக்கான தொழில் வரியும் அதிகபட்சமாக 35% அதிகரிக்கப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கு 21 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு எவ்வித தொழில் வரியும் இல்லை. 21, 001 ரூபாய் முதல் 30,000 வரை சம்பாதிப்போருக்கு 180 ரூபாயும், 30,001 ரூபாயிலிருந்து 45,000 ரூபாய் வரை ஊதியம் பெறுவோருக்கு 430 ரூபாயும், 45,001 ரூபாயிலிருந்து 60,000 வரை வருமானம் பெறுவோருக்கு 930ம், 60,001 ரூபாய் முதல் 75,000 ரூபாய் வரை சம்பளம் பெறுவோருக்கு 1025ம் வசூலிப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.75,001 ஒரு ரூபாய்க்கு மேல் சம்பலம் பெறுவோரிடம் வசூலிக்கப்பட்ட வந்த 1,250 ரூபாய் வரியில் மாற்றம் செய்யப்படவில்லை. இதேபோல மாநகராட்சியில் நிறுவனங்களுக்கான தொழில் உரிமம் கட்டணம் 30,000 ரூபாய் வரை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டீ கடைகளுக்கு குறைந்தபட்சமாக 2 ஆயிரம் ரூபாயும், அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

 

திருமண மண்டபங்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாயும், அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் தொழில் உரிமக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதற்கு மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

 

மாநகராட்சி சார்பில் நிறைய பணிகள் நடைபெறும் நிலையில், நிதி தேவை இருப்பதால், சுய வருவாயை அதிகரிக்கும் நோக்கில், கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon