--- --:--:-- --

நீட் நுழைவு தேர்வு இன்று தொடக்கம்..!

1

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் National Entrance Eliglibilty Entrance Exam நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வு இன்று இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் 557 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடத்தப்படுகிறது.

 

சுமார் 24 லட்சம் பேர் தேர்வு எழுதுவதற்கு பதிவு செய்துள்ள நிலையில், மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு தொடங்குவதற்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வர வேண்டும் என்றும் தேர்வு கூடத்தின் கதவு பூட்டப்பட்டப் பிறகு ஒருவரும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மூன்று பக்க ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, போஸ்ட் கார்டு சைஸ் போட்டோ, ஒட்டி எடுத்து வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அடையாள ஆவணமாக ஆதார் அட்டையை எடுத்து வர வேண்டும் என்றும் ஆதார் இல்லாவிட்டால் மட்டும் PAN, பள்ளி அடையா அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வருகைப் பதிவேட்டில் ஒட்டுவதற்காக ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவையும் எடுத்து வர வேண்டும். முதல் ஒரு மணி நேரம் மற்றும் கடைசி அரை மணி நேரம் மாணவர்கள் கழிவறைக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், கழிவறைக்கு சென்று வருவோர் அனைவரிடமும் மீண்டும் முழு பரிசோதனை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர வழக்கம்போல ஆடை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

 

ஜீன்ஸ் பேண்ட் அணியக் கூடாது என்றும், உலோகங்கள் அடங்கிய உள் ஆடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் குர்தி, லெக்கிங்ஸ், palazzos அணியவும் தடை செய்யப்பட்டுள்ளது. ஷூ அணியவும், மூக்குத்தி, கம்மல், செயின் உள்ளிட்ட ஆபரணங்கள் அணியவும் மாணவிகள் தலை முடியை இறுக்கி பின்னவும் தடை விதித்துள்ளது. பெரிய பட்டன்கள், அதிக பாக்கெட்டுகள் உள்ள பேண்ட் அணியவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.மத அடையாள ஆடைகளோடு வருபவர்கள் தேர்வு கூடத்துக்கு 12.30 மணிக்கு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் ஆனால், அது வெளியே தெரியக்கூடிய வகையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon