--- --:--:-- --

‘செயலற்ற’ செயல் அலுவலர்! தலைமையேற்க வேண்டியவர் தலைமறைவான பரிதாபம்! அவிநாசி கோயில் குடமுழுக்கு பாஸ் வழங்கலில் குளறுபடி.

dgdsg

புகழ்பெற்ற அவிநாசி கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்து வரும் நிலையில், அதற்கு திருஷ்டி பரிகாரமாக கோயில் செயல் அலுவலரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. பாஸ் வழங்கலில் ஏற்பட்ட குளறுபடியால், உண்மையான சிவ பக்தர்கள் தரிசனம் செய்வது தடைபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

செயல் அலுவலர் எங்கு சென்றார் என்று தெரியாத நிலையில், பத்திரிகையாளர்களும் அலைக்கழிக்கப்பட்டனர். கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற சிவாலயமாக உள்ளது, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள பிரசித்தி பெற்றா அவிநாசியப்பர் திருக்கோயில்.

 

இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட, பிப்ரவரி 2ஆம் தேதி கும்பாபிஷேகம்  செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 25ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. 79 குண்டங்கள், 8 லட்சம் அர்ச்சனைகள் என திட்டமிடப்பட்டு, சிவாச்சாரியர்கள் யாகபூஜை செய்து வருகின்றனர்.

 

பெரிய மனது வேண்டாமா பெரிய மருது?

 

கோயில் கும்பாபிஷேகத்திற்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகம் – காவல்துறை உள்ளிட்டவை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளன. பல்வேறு தொண்டு அமைப்புகள், ஆன்மிக அறக்கட்டளைகள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோரும் அவிநாசி கோயில் கும்பாபிஷேகத்தில் சேவையாற்றி வருகின்றனர்.

 

ஆனால், கோயில் நிர்வாகமோ குறிப்பாக கோயிலின் செயல் அலுவலராக உள்ள பெரிய மருதுபாண்டியோ, தனக்கும் கும்பாபிஷேகத்திற்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் இருந்து வந்துள்ளார். கும்பாபிஷேக ஏற்பாடுகளை அறங்காவலர்கள், இறைத் தொண்டர்கள் இரவு பகல் பார்க்காமல் செய்து வரும் நிலையில், இதையெல்லாம் தலைமையேற்று நடத்த வேண்டிய செயல் அலுவலரோ, கும்பாபிஷேக முதல் நாளில் கூட, கோயில் வளாகத்தில் பார்க்க முடியவில்லை.

 

தலைமறைவான பரிதாபம்!

 

செயல் அலுவலர் பெரியமருது பாண்டியன் கும்பாபிஷேக பணிகளை கவனிக்காமல் எங்கே சென்றார் என்று தெரியாத நிலையில், கும்பாபிஷேக பொறுப்புகளை தட்டிக் கழிக்க அவர் தலைமறைவாகிவிட்டாரோ என்று பக்தர்களே முணுமுணுப்பதை பார்க்க முடிந்தது.

 

தனியாரின் பங்களிப்பு, அறங்காவலர்கள் குழு, அமைப்புகளின் ஏற்பாட்டால் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தடபுடலாக இருந்தாலும், ஒருசில குறைகளும் இருப்பதாக, கோயிலை சுற்றிப்பார்த்த குற்றம் குற்றமே நிருபர்கள் குழுவிடம், பக்தர்கள் சிலர் வேதனையோடு தெரிவித்தனர்.

 

வசதி படைத்தவர்களுக்குத்தான் பாஸ்?

 

இது குறித்து பக்தர்கள் நம்மிடம் கூறுகையில், “கும்பாபிஷேக நாளில் நேரில் தரிசனம் செய்வதற்கு, முக்கியமானவர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கியுள்ளனர். குறிப்பாக, 25,000-க்கு மேல் நன்கொடை வழங்கியவர்களுக்கு மட்டுமே கும்பாபிஷேக பாஸ் தந்துள்ளனர்.

 

இதனால், வசதி படைத்தவர்கள் மட்டுமே கும்பாபிஷேக நேரத்தில் கோயிலுக்குள் இருக்கும் சூழல் உள்ளது. பணம் கொடுத்தால் தான் சாமியை தரிசிக்க முடியும் என்றால், வசதியற்ற பக்தர்களின் நிலை என்ன? இந்த விஷயத்தில் கோயில் அறங்காவலராக உள்ள ஏற்றுமதியாளர் சங்க முன்னாள் தலைவர் சக்திவேல் போன்றவர்கள் கூட கவனிக்காமல் விட்டது வருத்தமான விஷயமாகும்.

 

கும்பாபிஷேக பாஸ் விஷயத்தை பார்க்கும்போது காசு கொடுத்து விற்றுள்ளார்களோ என்று தோன்றுகிறது. இது உண்மையில் வருத்தமான விஷயம். சிறப்பாக நடைபெறும் கும்பாபிஷேகத்தில், செயல் அலுவலரின் நடவடிக்கைகள், பாஸ் வினியோக குளறுபடி போன்றவை திருஷ்டியாக அமைந்துள்ளன” என்று நம்மிடம் தெரிவித்தனர்.

 

நிருபர்களுக்கு பாஸ் வழங்க மனமில்லையா?

 

பக்தர்கள் கூறுவது உண்மைதான் என்று சக பத்திரிகையாளர்கள் சிலரும் தெரிவித்தனர். குறிப்பிட்ட ஒரு சில பத்திரிகைகள் தவிர மற்ற யாருக்கும் கும்பாபிஷேக செய்தி சேகரிக்க பாஸ் எதையும் முதலில் வழங்க மறுத்துவிட்டனர். யூ டியூபில் நேரலை செய்யப்படுகிறது. அதில் இருந்து விஷுவலை எடுத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் ஏற்பாட்டாளர்கள் தரப்பில் முதலில் தெரிவிக்கப்பட்டது.

 

இதனால், திருப்பூர் செய்தியாளர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். செய்தித்துறை அமைச்சர் சாமி நாதனின் சொந்த மாவட்டத்திலேயே செய்தியாளர்களுக்கு இந்த லட்சணத்தில்தான் மரியாதையா என்று ஆதங்கப்பட்ட நிருபர்கள், இதை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அறங்காவலர் சக்திவேலிடமும் தெரிவிக்கப்பட்ட நிலையில், முக்கியமான அனைத்து செய்தியாளர்களுக்கும் பின்னர் பாஸ் வழங்கப்பட்டது.

 

போராட்டத்தில் இறங்கிய அமைப்புகள்!

 

அதேபோல், உள்ளூரில் உள்ள பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட நிர்வாகிகள், பக்தர்களும் கோயில் நிர்வாகத்தின் குளறுபடிகளை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திலும் இறங்கியதால், கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் இரவில் பரபரப்பான சூழல் நிலவியது.

 

இந்த விவகாரம் குறித்து “குற்றம் குற்றமே” தரப்பில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை தொடர்பு கொண்டு கருத்தறிய முற்பட்டோம். அவரது மொபைல்போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. அமைச்சர் சாமிநாதனை தொடர்பு கொண்டபோது அவரது உதவியாளர், பாஸ் குளறுபடி, செயல் அலுவலர் விவகாரம் குறித்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

 

ஒரு நல்ல காரியம் எவ்வித தடையுமின்றி சிறப்பாக முடிய வேண்டும் என்பதே நம் எல்லோரின் எதிர்பார்ப்பும் வேண்டுதலுமாகும். ஆனால், செயல் அலுவலர் பெரியமருது பாண்டியன் போன்றவர்களின் நடவடிக்கைகள், இதற்கு இடையூறு ஏற்படுத்துவது போல் அமைந்துவிடுகின்றது. கோயில் அறங்காவலராக உள்ள சக்திவேலுவும் தன்னை போன்ற தொழிலதிபர்கள் பக்கம் சார்ந்து இருக்காமல், சாதாரண பக்தர்களின் தேவைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

பெரியமருதுபாண்டியன் போன்ற செயல்பாடற்ற செயல் அலுவலகர்களால் அரசின் நற்பெயர் குறிப்பாக, சிறப்பாக செயல்பட்டு வரும் அறநிலையத்துறை, மாவட்ட அமைச்சர் சாமிநாதன் போன்றவர்களின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்பட்டுவிடக்கூடும். எனவே, கும்பாபிஷேகம் முடிந்த பிறகாவது செயல் அலுவலரை மாற்ற வேண்டும்; ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட, இறை பக்தி கொண்ட, செயல்பாடுள்ள அலுவலரை நியமிக்க வேண்டும் என்பது, பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon