சந்திரபாபு நாயுடுவை சந்திக்காத ரஜினிகாந்த்..!

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த 9ஆம் தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். விஜயவாடாவில் 8 மணி நேரம் விசாரணைக்குப் பின்னர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவருக்கு வரும் செப்டம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.

 

இதனையடுத்து, ராஜமுந்திரி மத்திய சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டார். உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள காரணத்தாலும், இசட் ப்ளஸ் பாதுகாப்பில் உள்ளவர் என்பதாலும் சந்திரபாபு நாயுடுவுக்கு சிறையில் தனி அறை ஒதுக்கப்பட்டது.

 

மேலும், வீட்டில் சமைக்கப்பட்ட உணவை எடுத்துக்கொள்ளவும், மருந்துகள் எடுத்துக்கொள்ளவும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட தகவலறிந்த நடிகர் ரஜினிகாந்த், அவரது மகன் நாரா லோகேஷை தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

 

சந்திரபாபு நாயுடுவின் தன்னலமற்ற சேவை அவரை பத்திரமாக சிறையில் இருந்து வெளியே கொண்டு வரும் என்றும், இந்த பொய் வழக்குகள் எல்லாம் அவரை ஒன்றும் செய்யாது என்றும் ஆறுதல் வார்த்தைகளை கூறியுள்ளார். இதனிடையே சந்திரபாபு நாயுடுவை சிறையில் சந்திக்க ரஜினி சிறை நிர்வாகத்திடம் மனு போட்டிருந்தார். அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இன்று அவரை சந்திக்கவும் முடிவு செய்திருந்தார்.

 

முன்னதாக உயிருக்கு ஆபத்து இருப்பதால், வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிடக் கோரிய சந்திரபாபு நாயுடுவின் மனுவை விஜயவாடா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு 2 மனுக்கள் தாக்கல் செய்துள்ளார். இந்த 2 வழக்குகளும் வரும் 19ஆம் தேதி விஜயவாடா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.