--- --:--:-- --

ஆண்டவர் ராமசாமி ஆட்டம்! ரூ.40 கோடி நிலத்தை ஒன்றரை கோடிக்கு ‘ஸ்கெட்ச்’ போட்டு சுருட்டல்..திமுக புள்ளிகள் ஆசியுடன் “டிரஸ்ட் பெயரில் உருட்டல்”!

poster

கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் ‘ஆண்டவர்’ ராமசாமி, ரூ.40 கோடி மதிப்புள்ள 8.3 ஏக்கர் நிலத்தை, அரசியல்வாதிகளின் ஆசியோடு, வெறும் ஒன்றரை கோடிக்கு தனது அறக்கட்டளையின் பெயருக்கு மாற்றிக் கொண்ட விவகாரம், திருப்பூரில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

 

பொதுவாக கல்வித்தந்தை, கல்வி வள்ளல் என்ற பெயர்களில் உலா வரும் பணக்கார தொழிலதிபர்கள், பிரபலங்கள் சிலரின் பின்னணியை பார்த்தால் பயங்கரமாக இருக்கும். கல்விக்கு சேவை செய்வதாகக் கூறிக் கொண்டு, சாராய வியாபாரம், நில அபகரிப்பு, கட்ட பஞ்சாயத்து, ரவுடியிசம், கட்சிகளுக்கு மாமூல் என்று, இவர்கள் செய்து வரும் அடாவடியின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.

 

அந்த வகையில் நமது திருப்பூர் மாவட்டத்திலும், கடைந்தெடுத்த சில கல்வி வள்ளல்கள் இருக்கிறார்கள். கல்லூரி தொடங்கி காசு பார்ப்பதற்காக அறக்கட்டளை தொடங்குவது; அறக்கட்டளை என்ற பெயரில் வருமான வரி ஏய்ப்பது, பின்னர் அரசு நிலங்களை அபகரிப்பது என்று, இவர்களின் இன்னொரு பக்கம், “அட, இவரா இப்படி?” என்ற ரீதியில் இருக்கும்.

 

இதுபோன்ற ரகத்தில் தற்போது தெரியவந்திருப்பவர்தான் திருப்பூர் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் பள்ளியை நடத்தி வரும் “ஆண்டவர்” ராமசாமி. எப்போதும் நெற்றில் 3 பட்டை, சிரித்த முகம் என்று பக்திப் பழமாக இருக்கும் இவரது பள்ளி ஊத்துக்குளி வட்டம் கூலிபாளையம் அருகிலுள்ள எஸ். பெரியபாளையத்தில் உள்ளது. இவர், தனது பள்ளிக்காக, ரூ. 40 கோடி நிலத்தை, வெறும் ஒன்றரை கோடி ரூபாய்க்கு சாமர்த்தியமாக அமுக்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூரை பரப்பாக்கி இருக்கும் இந்த விவகாரம் குறித்து, “குற்றம் குற்றமே” சிறப்பு நிருபர் குழு களமிறங்கி விசாரணை நடத்தியது. இதில் பல பகீர் தகவல்கள் நமக்கு கிடைத்தன.

 

அதாவது, மிகவும் சாதுர்யமாக காய்களை நகர்த்தி, ஆண்டவர் ராமசாமி, அப்பாவி விளை நிலங்களை, புறம்போக்கு நிலம் என்று மாற்றி, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தனது கல்வி நிறுவனத்திற்காக பெற்றுள்ளார். இதற்காக, அதிமுக ஆட்சி முடிவுறும் தருவாயில் ரூட் போட்டுள்ளார்; திமுக ஆட்சி காலத்தில், அவருக்கு ரோடே போட்டு கொடுத்துள்ளனர்.

 

திருப்பூரில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கூலிபாளையத்தில் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் பள்ளிக்கு எதிரில் 8.3 ஏக்கர் நிலத்தை வாங்கி, அங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க புதிய திருப்பூர் அபிவிருத்தி கழகம் சார்பில் திட்டமிடப்பட்டது. இந்த 8.3 ஏக்கர் நிலமும் விவசாயிகளின் பட்டா பூமி ஆகும். அதாவது, குறைந்த விலை கொடுத்து, விவசாயிகளிடம் இருந்து இந்த இடத்தை அரசு பறித்துக் கொண்டது என்றே சொல்ல வேண்டும்.

 

சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் தொடங்குபோதுதான், “ஆண்டவர்” ராமசாமியின் தந்திர புத்தி வேலை செய்யத் தொடங்குகிறது. சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால், பள்ளியில் படிக்கும் 3 ஆயிரம் குழந்தைகளின் சுகாதாரம் பாதிக்கப்படும் என்று அப்பாவியாக, மாணவர் நலனின் அக்கறை காட்டுபவராக மாறினார்; சுத்திகரிப்பு நிலையத்தை பள்ளிக்கு எதிரே அமைக்க வேண்டாம் என்று கூறியதோடு, தனக்குள்ள அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, களமாடத் தொடங்கினார்.

 

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, தனது சார்பில் வேறு பகுதியில் இடம் தருவதாகவும் அதற்கான செலவை தாமே ஏற்றுக் கொள்வதாகவும் பெருந்தன்மையோடு கூறியிருக்கிறார். அதன்படி, அக்ரஹார பெரியபாளையத்தில் 13 ஏக்கர் நிலத்தை, நியூ திருப்பூர் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷனுக்கு தானகிரயம் செய்து தந்துள்ளார். அப்போது, ஒரேயொரு ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார்.

 

அதன்படி, தானகிரயமாக ஆண்டவர் ராமசாமி தரும் நிலத்திற்கு ஈடாக, அரசுக்கு சொந்தமான ஏதாவதொரு இடத்தை வழங்க வேண்டும் என்பது அது. (அடடா, இதன் பெயர் தான் தானமா?) பின்னர், 2020 ஆம் ஆண்டில், அதிமுக ஆட்சி இறுதி கட்டத்தை நெருங்கிய தருணம் பார்த்து, காய்களை நகர்த்தினார்.தனது பள்ளிக்கு எதிரே இருந்த இடத்தையே தந்திரமாக தனது அறக்கட்டளைக்கு பெற முடிவு செய்தார்.

அதன்படி, அப்போதிருந்த அதிமுக அமைச்சரவை, விகாஸ் வித்யாலயா மெட்ரிக் பள்ளிக்கு எதிரே உள்ள 8.3 ஏக்கர் நிலத்தை, பள்ளிக்கே வழங்க ஒப்புதல் வழங்க ஏற்பாடு செயது அதில் வெற்றியும் பெற்றார். அதன்பின்னர் வந்த திமுக அரசு, முந்தைய அதிமுக அரசு செய்த தவறுகளை தட்டிக் கேட்காமல், ஆண்டவருக்கு சாமரம் வீசியது. இன்னும் சொல்லப்போனால் உள்ளூர் எம்.எல்.ஏ. உள்ளிட்ட முக்கிய புள்ளிகளின் உதவியுடன், ஆண்டவர் ராமசாமி, தனது காரியத்தை மிக எளிதாக செய்து முடித்துக் கொண்டார்.

 

இலவசமாக பள்ளிக்கு வழங்கினால் பிற்காலத்தில் சிக்கல் வரலாம் என்று கருதி, இந்த நிலத்தை வெறும் ஒன்றரை கோடி ரூபாய்க்கு அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளார் ராமசாமி. இதற்காக, திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், நில வகைப்பாடும் பட்டா மாறுதலும் காதும் காதும் வைத்தாற்போல நடந்துள்ளது. அதன்படி, மிக சாமர்த்தியமாக விவசாய பட்டா நிலத்தை, அரசு புறம்போக்கு நிலம் என்று மாற்றப்பட்டு, பின்னர் புறம்போக்கு நிலம் என்ற வகைப்பாட்டின் கீழ், ஆண்டவர் ராமசாமியின் விகாஸ் சேவா டிரஸ்ட் பெயரில் பட்டா மாறுதல் செய்து நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

இந்த விஷயங்கள் எல்லாம் உள்ளூர் வி.ஏ.ஓ – ஆர்.ஐ. ஆகியோருக்கு தெரியப்படுத்தாமல், அவர்களின் ஒப்புதல் இல்லாமல், ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆவணங்களில் திருத்தம் செய்து, பட்டா மாறுதல் நடந்துள்ளதுதான் இதில் குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்பார்கள். ஆனால், ஆண்டவர் ராமசாமி, கட்சிகளுக்கேற்ப தனது நிறத்தை மாற்றிக் கொண்டு, திமுக தலைமையுடன் நெருக்கம் காட்டி, காரியத்தை சாதித்துக் கொண்டுள்ளார்.

 

திமுகவினருடன் அவருக்கு உள்ள உறவுக்கு உதாரணமாக, திருப்பூருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தபோது ராமசாமிக்கு கிடைத்த முக்கியத்துவத்தை குறிப்பிடலாம். ஆர்.எஸ்.எஸ். அனுதாபியான ஆண்டவர் ராமசாமிக்கு, முதல்வர் ஸ்டாலினின் நிகழ்ச்சியில் முதல் வரிசை ஒதுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு, இரு கழகங்களின் முக்கிய புள்ளிகளையும் தன் கைக்குள் போட்டுக் கொண்டு, அந்த நெருக்கத்தை பயன்படுத்தி, ரூ.40 கோடி மதிப்புள்ள 8.3 ஏக்கர் நிலத்தை வெறும் ஒன்றரை கோடிக்கு வளைத்துப் போட்டுள்ளார் ஆண்டவர் ராமசாமி.

 

அரசு மற்றும் அரசியல்வாதிகளின் முழு ஆசியோடு, இவ்வாறு ஆண்டவர் ராமசாமி விவசாய நிலத்தை, பட்டா நிலமாக்கி, தனது அறக்கட்டளைக்கு சுருட்டிக் கொண்டது, திருப்பூரில் உள்ள மற்ற பல பிரபலங்களுக்கே வயிற்றெரிச்சலை கிளப்பி இருக்கிறது. விவசாயிகளோ, தங்கள் நிலம் போய்விட்டதே என்று கண்ணீர் வடிக்கிறார்கள்.

 

கல்வித் தந்தை என்ற பெயரில், ஆண்டவர் ராமசாமி போன்றவர்கள் இதுபோன்ற ஆதாயம் பெறுவது, ஆளும் திமுக அரசுக்கு நிச்சயம் சிக்கலை ஏற்படுத்தலாம். எனவே, இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, பட்டா நிலம் புறம்போக்காக மாற்றியது எப்படி? இதற்கு துணை போனவர்கள் யார்? இதுபோல் வேறு இடங்களில் விதிமீறல்களில் ஆண்டவர் ராமசாமியோ, அவரது பள்ளியோ ஈடுபட்டுள்ளதா ? என்ன என்பது குறித்து புள்ளி விபர ஆதாரங்களோடு வரும் குற்றம் குற்றமே இதழில் வெளியாகும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon