--- --:--:-- --

சாதித்தார் ஈபிஎஸ்! சரிந்தார் ஓபிஎஸ்…!! அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு… பன்னீரை நீக்கி பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம்!

ygk

நீதிமன்ற அனுமதியுடன் சென்னையில் இன்று காலை நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வாகி உள்ளார். தொண்டர் படை பலமின்றி, பொதுக்குழுக்கு தடை போட முயன்று தோல்வியடைந்த ஓபிஎஸ், கட்சியில் பதவி அதிகாரங்கள் அனைத்தையும் பறிகொடுத்து, தனித்து விடப்பட்டுள்ளார்.

 

பரபரப்பான சூழலில், சென்னையில் இன்று (ஜூலை 11) அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, இதற்கு தடை கேட்டு தாக்கல் செய்த மனுமீது, இன்று காலை 9 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை, சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நிராகரித்துவிட்டார்.

 

நீதிமன்றத்தின் உத்தரவு கிடைத்த தகவல், எடப்பாடி பழனிச்சாமிக்கு போய்ச் சென்றடைந்ததும் பொதுக்குழுவை நடத்தலாம் என்று பச்சைக்கொடி காட்டினார். அதன் பின்னரே, அவரும் பொதுக்குழு மேடையேறினார். முதலில், அதிமுக செயற்குழு கூட்டமும், அதனை தொடர்ந்து, பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது.

 

அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், பொதுக்குழுவில் நிறைவேற்றபடவுள்ள 16 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

அதன்படி, ஏற்கனவே இருக்கும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன. இதன் மூலம் இரட்டை தலைமை ரத்து செய்யப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் ஆக்குவதற்கு வசதியாக அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக ஜெயலலிதா வகித்து வந்த பதவியை ரத்து செய்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, அதிமுக-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

 

அதிமுகவில் நிரந்தர பொதுச் செயலாளர் பதவி மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அடுத்த நான்கு மாதத்திற்குள் தேர்தல் மூலம், நிரந்தர பொதுச் செயலாளர் பதவி நிரப்பப்படும் என்றும், அதுவரையில் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவார் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இந்த தகவலை அறிந்ததும் எடப்பாடி ஆதரவாளர்களும் அதிமுகவினரும் உற்சாகமடைந்து, பட்டாசு வெடித்து கொண்டாடினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குறிப்பாக, சேலத்தில் அதிமுக தொண்டர்கள் உற்சாகம் பொங்க ஆரவாரமாக கொண்டாடினர்.

 

இதற்கு முன்பாக, 1974 ம் ஆண்டில் எம்.ஜி.ஆர், 1978ல் நெடுஞ்செழியன், 1980ல் ப.உ.சண்முகம், 1985ல் ராகவானந்தம், 1986ல் எம்.ஜி.ஆர், 1991ல் ஜெயலலிதா, 2016 ஆம் ஆண்டில் சசிகலா ஆகியோரின் வரிசையில், தற்போது எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்திருக்கிறார். அதிமுகவின் பொதுச் செயலாளராகி இருப்பதன் மூலம், எடப்பாடி பழனிச்சாமி, கட்சியை ஒட்டுமொத்தமாக தனது கைக்குள் கொண்டு வந்துள்ளார்.

 

இன்றைய பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான ஓரத்தநாடு வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்டவர்களும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி சிறப்பு தீர்மானத்தை நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்தார். அதன் அடிப்படியில், கட்சியில் இருந்து அவர்கள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளனர். இது ஓபிஎஸ்-க்கு தனிப்பட்ட முறையில் பெரும் அரசியல் சரிவாக கருதப்படுகிறது.

 

அதிமுகவில் இருந்து கொண்டே சசிகலாவுடன் ரகசிய பேச்சு, திமுக அரசுக்கு அனுசரணையான போக்கு என்பதுடன் மட்டுமின்றி தனது குடும்ப வாரிசுகளை கொண்டு வருவது போன்றவற்றில் தான் ஓபிஎஸ் கவனம் செலுத்தி வந்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகிய வந்தார். ஓபிஎஸ் அமைதியானவர், ஜெயலலிதாவின் அபிமானம் பெற்ற விஸ்வாசி என்றெல்லாம் சொன்னாலும், கட்சியை வழி நடத்த, நல்லவராக இருப்பதுடன் வல்லவராகவும் இருக்க வேண்டுமென்று அதிமுகவினர் நம்பினர்.

 

அதிமுகவுக்குத்தான் இரட்டை தலைமை உள்ளது; தனது பதவிக்கு எந்த ஆபத்தும் வராது என்ற நினைப்புடன், ஜாதி மற்றும் குடும்ப அரசியல் என்று குறுகிய வட்டத்துக்குள் ஓபிஎஸ் செயல்பட்டுக் கொண்டிருந்தால், நாளடைவில் கட்சிக்குள்ளேயே ஆதரவை இழக்கத் தொடங்கினார். அடுத்தடுத்த மோசமான அரசியல் வியூகங்களால் தோற்றுப்போய், தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதுடன் அரசியலில் தனித்து விடப்பட்டுள்ளார்.

 

அதே வேளையில், சாதுர்யமாக செயல்பட்ட எடப்பாடி பழனிச்சாமியோ, மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தன்வசப்படுத்தினார். அதிமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்ட செயலாளர்களில், 70-க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் 2,665 பேரில், 2,300-க்கும் மேற்பட்டோரை தன் பக்கம் கொண்டு வந்தார். மொத்தமுள்ள 65 சட்டமன்ற உறுப்பினர்களில், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரை தவிர 62 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னால் அணி வகுந்துள்ளனர்.

 

கட்சியினரிடம் இயல்பாக பேசுவது, நிர்வாகிகளிடம் தொடர்பு, கொங்கு மண்டல செல்வாக்கு என, படிப்படியாக தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டே இருந்த எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் அசந்த தருணம் பார்த்து, அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தேவை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை வைத்து, தூபம் போட்டார்.

 

அன்று தொடங்கிய ஒற்றைத் தலைமை கோஷம், அதிமுகவில் புயலை கிளப்பியது; அதுவரை ஒற்றுமையாக இருந்ததுபோல் காணப்பட்ட ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் மோதிக் கொள்ள ஆரம்பித்தனர். இதில் ஒவ்வொருமுறையும் ஓபிஎஸ் தரப்பில் சரிவை சந்திக்க, நீதிமன்றப் படியேறினர். ஆனால், கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடாது என்று தெரிவிக்க, ஓபிஎஸ் ஒடித்து, நொடிந்து போனார். ஓபிஎஸ் பலவீனமடைந்து ஒற்றையாளாக நிற்க, சரியான நேரத்தில் காய்களை நகர்த்தி, அதிமுகவினரின் அமோக ஆதரவுடன் இறுதியில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளார்.

 

கடந்த சில மாதங்களாக, அதிமுகவை சுழன்று தாக்கிய புயல் தற்போது ஓய்ந்துள்ளது. எனினும், தெளிவான வானிலை இல்லாத சூழலில், ஓபிஎஸ் தரப்பில் இருந்து குடைச்சல்கள் தரப்படலாம். எது எப்படியானலும் கட்சியினர் ஆதரவோடு பொதுச் செயலாளராகிவிட்ட எடப்பாடி, அவற்றையெல்லாம் தகர்த்து எறிந்து, தனி ஒருவராக கட்சியை வழி நடத்துவார் என்று அதிமுகவினர் நம்புகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon