சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினசரி 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி..!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினசரி 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் நவம்பர் மாதம் 17-ஆம் தேதி முதல் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை தொடங்க உள்ளது.
கொரொனா கட்டுப்பாடுகள் காரணமாக தினசரி குறைந்த அளவிலான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வர அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த ஆண்டு பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில் நாளொன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பம்பையில் குளிப்பதற்கும் இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






