கெட்டுப்போன இறைச்சியில் பிரியாணி தயாரித்த கடைக்கு சீல்..!
கரூர் அருகே கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தி பிரியாணி தயாரித்து விற்பனை செய்ததாக பிரபல பிரியாணி கடை சமையல் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் கரூர் பிரியாணி கடை என்ற பெயரில் பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. உரிமையாளரின் வீட்டின் அருகில் உள்ள குடோனில் இருந்து பிரியாணி சமைத்துக் கொண்டு வரப்படுகிறது. இங்கு சமைக்கப்படும் கோழிக்கறி அசுத்தமாகவும், பழைய கெட்டுப்போன கோழி இறைச்சிகளை குளிர்சாதன பெட்டிகளில் பல நாட்கள் வைத்து உபயோகப்படுத்தப்பட்டு வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டினர்.
குற்ற சாட்டை அடுத்து சமையல் அறையில் இருந்த குடோனுக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரி மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த கோழிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பின்னர் சமையல் செய்யும் இடத்திற்கு சீல் வைக்கப்பட்டு 10,000 ரூபாய் அபராதமும் விதித்தனர்.






