பரிசாக கிடைத்த காரை பயிற்சியாளருக்கு அன்பளிப்பாக வழங்கிய தமிழக வீரர் நடராஜன்..!
பரிசாக கிடைத்த புதிய காரை தனது பயிற்சியாளருக்கு அன்பளிப்பாக வழங்கிய தமிழக வீரர் நடராஜனின் செயல் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் யாரும் எதிர்பாராத வகையில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
இந்த தொடரில் பல முன்னணி வீரர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் புதுமுக அறிமுக வீரர்களாக களமிறங்கிய நடராஜன், ஷர்துல் தாகூர் போன்றோர் அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் சிறப்பாக செயல்பட நடராஜன் உட்பட ஆறு இளம் வீரர்களுக்கு காரை பரிசாக தருவதாக தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா அறிவித்திருந்தார். இதன்படி தற்போது நடராஜனுக்கு மகேந்திராவின் புதிய கார் இஸ்யூட் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் தனக்கு பரிசாக கொடுக்கப்பட்ட காரை பயிற்சியாளருக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார் நடராஜன்.






