ஸ்டாலின்தான் வந்தாரு… வாக்கிங் போனாரு… கோவையில் கலகல..!
கோவையில் இன்று பிரசாரம் மேற்கொண்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டவாறு கடைக்காரர்கள், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் நான்கு தினங்களே உள்ளதால், தலைவர்களின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலினும் இன்று ஒரேநாளில் கோவை மாவட்டத்தில் பிரசாரம் செய்கின்றனர்.
இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்திற்காக நேற்று இரவே கோவைக்கு வந்த மு.க. ஸ்டாலின், நேற்றிரவே ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் வீதி, வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அதை தொடர்ந்து நட்சத்திர ஓட்டலில் தங்கிய ஸ்டாலின், இன்று காலை 7 மணிக்கு ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
அந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள், இளைஞர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணிக்கு ஆதரவு திரட்டினார். ஸ்டாலினுடன் பலரும் ஆர்வமுடன் மொபைல்போனில் செல்பி எடுத்து கொண்டனர். நடை பயிற்சியின் போது, ஸ்டாலினுடன் கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், சிங்காநல்லூர் வேட்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ.வும் உடன் சென்றனர்.
அத்துடன், கடைகள், வாகனங்களில் சென்றவர்களிடம் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். பின்னர் ரேஸ்கோர்சில் இருந்து நடந்தே நீதிமன்றம் அருகே ஓட்டலுக்கு சென்ற ஸ்டாலின், ஓட்டலில் காபி குடித்தார். அதை தொடர்ந்து, திருச்சி சாலை ஹைவேஸ் காலனிக்கு சென்ற ஸ்டாலின் அந்த பகுதியில் உள்ள திண்ணையில் அமர்ந்து பெண்களுடன் கலந்துரையாடி வாக்கு சேகரித்தார். ஸ்டாலின் இயல்பாக நடந்து சென்று பொதுமக்களுடன் கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தது, திமுகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




