முதல்வர் ஈ.பி.எஸ். குறித்து சர்ச்சை பேச்சு… ஆ.ராசாவுக்கு வலுக்கும் கண்டனம்!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறப்பை தொடர்புபடுத்தி, தி.மு.க துணை பொதுச்செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசியிருப்பது, பலரின் கண்டனத்திற்கு ஆளாகி இருக்கிறது. கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்ட திமுக ஆதாரவாளர்களே இதை கண்டித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு இது சறுக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகல் பரஸ்பரம் கடுமையாக விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும், அதற்கு இன்னொரு தரப்பினர் பதிலடி தருவம் காலங்காலமாக நடக்கும் ஒன்றுதான். ஆனால், சமீபகாலமாக சில தலைவர்கள், தலைவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவது என, வரம்புமீறிச் செல்கின்றனர்.
அண்மையில் சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில், தி.மு.க வேட்பாளர் எழிலனை ஆதரித்தும், அடுத்த நாள் பெரம்பலுார் மாவட்டம், குன்னம் தொகுதி தி.மு.க வேட்பாளர் சிவங்கரனை ஆதரித்தும், தி.மு.க துணை பொதுச் செயலர் ஆ.ராசா பேசினார். படித்த பட்டதாரியான, முன்னாள் அமைச்சர் ஒருவரின் பேச்சு போல் அவரது பிரசாரம் இல்லை. தலைவர்களை ஒருமையில் பேசியதோடு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தனிப்பட்டை முறையில் கடுமையாக விமர்சனம் செய்தார்.
ஆ. ராசா பேசியதாவது: இருட்டுக்கு பின், விடியல் வேண்டும். கருணாநிதி ஆட்சி வர, ஸ்டாலின் முதல்வராக வேண்டும். ஸ்டாலின் – ஈ.பி.எச். இருவரையும் எடை போட்டு பார்ப்போம். ஜனநாயகத்தை காப்பாற்ற, சிறையில் இருந்தவர் ஸ்டாலின். கட்சியில், மாவட்ட பிரதிநிதி,பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என, படிப்படியாக உயர்ந்து, தலைவரானார். அவர் திணிக்கப்பட்டவர் அல்ல. முறைப்படி பெண் பார்த்து நிச்சயம் செய்து, திருமணம் நடத்தி, சாந்தி முகூர்த்தம் நடத்தி, 300 நாட்கள் கழித்து, சுகப் பிரசவத்தில் பிறந்தவர் ஸ்டாலின்.
ஆனால், ஜெயலலிதா இறக்கும் வரை, ஈ.பி.எஸ் என்றால் யாருக்கும் தெரியாது. இவர், ஊர்ந்து போய் முதல்வரானார். பத்திரிகைகள், அவரை மிகப் பெரிய தலைவர் போல சித்தரிக்கின்றன. ஈ.பி.எஸ்-சுக்கு என்ன தகுதி, தியாகம் இருக்கிறது. நல்ல உறவில், ஆரோக்கியமாக சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின்; கள்ள உறவில் பிறந்த குறை பிரசவம் எடப்பாடி என்று ராசா பேசினார்.
முதல்வரின் பிறப்பு குறித்து பகிரங்கமாக பொதுவெளியில் ஆ. ராசா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறனர். தி.மு.க மகளிரணி தலைவியும், எம்.பி.,யுமான கனிமொழியும், ஆ. ராசா பெயரை குறிப்பிடாமல் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும், பெண்களை இழிவுபடுத்தி, தனிப்பட்ட முறையில், விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லாருமே, மனதில் வைத்துக் கொண்டால், இந்த சமூகத்திற்கு நல்லது என்று கனிமொழி கூறியுள்ளார்.
திமுக ஆதரவு கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், “தடைகளைத் தாண்டி தீவிர அரசியலில் ஈடுபடும் பெண்களை இழிவுபடுத்துவதும், ஆண்கள் எதிரெதிராக களம்காணும்போது கூட அவர்கள் வீட்டுப் பெண்களை இழிவுபடுத்துவதும் தொடர்ந்து நடக்கிறது. கண்ணியமான,நேர்மையான அரசியல் என்பது பெண்களை மதிப்பதில் இருந்தே துவங்கமுடியும்” என்று பெயர் குறிப்பிடாமல் கண்டித்துள்ளார்.

அண்மையில் கோவையில் திமுக பிரசாரத்தில் அக்கட்சியின் பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோடி, பெண்களின் இடுப்பு குறித்து விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கினார். அவர் மீது கோவை போலீசில் மகளிர் அமைப்புகள் புகார் செய்துள்ளன. இந்த நிலையில், ஆ. ராசாவின் தரம் தாழ்ந்த இந்த பேச்சு, திமுகவினர் மத்தியிலேயே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
லியோனி, ஆ. ராசா போன்றவர்கள் மைக் கிடைத்தால் எதையாவது உளறிக் கொட்டி, திமுகவுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளை விழாமல் செய்துவிடுவார்கள் போலிருக்கிறது. இவர்களின் நாவை அடக்க, ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது திமுகவுக்கு எதிர்மறை தாக்கத்தை தருமென்று திமுக மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




