--- --:--:-- --

முதல்வர் எடப்பாடி குறித்து சர்ச்சை பேச்சுக்கு ஆ. ராசா விளக்கம்!

raja

திமுக தலைவர் ஸ்டாலினையும் முதல்வரையும் அரசியல் குழந்தையாக ஒப்பிட்டுத்தான் விமர்சித்தேன்; தனிப்பட்ட முறையில் அவரை விமர்சிக்கவில்லை என்று, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா விளக்கம் அளித்துள்ளார்.

 

சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில், தி.மு.க வேட்பாளர் எழிலனை ஆதரித்து, தி.மு.க துணை பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பிரச்சாரம் செய்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டு பேசினார்.

 

அப்போது பேசிய ஆ.ராசா, “அரசியல் வளர்ச்சியில் மு.க. ஸ்டாலின், நல்ல உறவில் பிறந்த சுகப்பிரசவ குழந்தை; எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்த குறைப்பிரசவ குழந்தை. அந்தக் குறைப்பிரசவ குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ஒரு டாக்டர் தேவைப்பட்டார், அவர்தான் பிரதமர் மோடி: என்று பேசினார். ஆ.ராசாவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில் திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் ஆ. ராசாவின் பெயரை குறிப்பிடாமல், கண்டனம் தெரிவித்தனர்.

 

இதற்கிடையே, தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வரை தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹுவிடம் புகாரளிக்கப்பட்டது. ஆ. ராசா பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

 

இந்நிலையில், முதல்வர் குறித்த சர்ச்சை பேச்சுக்கு ஆ. ராசா இன்று விளக்கம் அளித்துள்ளார். ஆ.ராசா கூறுகையில், முதல்வரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. ஸ்டாலினையும் முதல்வரையும் அரசியல் குழந்தையாக ஒப்பிட்டு பேசிய எனது பேச்சை வெட்டியும் ஒட்டியும் சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்படுகிறது. அது முற்றிலும் தவறானது.

 

நான் எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட பிறப்பையோ, அவருடைய தனிப்பட்ட புகழையோ களங்கம் விளைவிக்கும் வகையில் பேச வேண்டிய எண்ணமில்லை. அரசியல் ஆளுமையை ஒப்பிட்டேன். ஸ்டாலின் முறையாக, படிப்படியாக வளர்ந்து தலைவராகியுள்ளார். குறுக்கு வழியில் நாங்கள் வரவில்லை என்று குறிப்பிட்டேன்.

 

இரண்டு பேரின் அரசியல் ஆளுமையைக் குறிப்பிட அப்படி ஒரு ஒப்பீடு செய்யப்பட்டது. அதைத் தவறாகப் புரிந்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon