அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தேர்தல் நேரங்களில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் வழங்குவதாக குற்றச்சாட்டு எழுகின்றன. இப்படி வாக்காளர்களுக்கு பணம் தருவதை தடுக்க, வருமான வரித்துறையினர் சில முக்கிய புள்ளிகளை குறிவைத்து சோதனை நடத்துவது வழக்கம். தமிழக முன்னாள் அமைச்சரும், திமுக பிரபலமுமான ஏ.வ. வேலுவுக்கு சொந்தமான நிறுவனங்கள், அலுவலகங்களி, வீட்டில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடத்தி, இன்று தான் நிறைவு செய்தது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்க உள்ளதாகவும், அளவுக்கு அதிகமாக செலவு செய்து வருவதாகவும் வருமான வரித்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, விராலிமலை வடக்கு ஆசாரி தெருவில் உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் ஆதரவாளரான வீரபாண்டியனின் அடுக்குமாடி வீட்டில் இன்று வருமான வரித்துறை துணை ஆணையர் அனுராதா தலைமையில் 4 கார்களில் வந்த அதிகாரிகள் 7 பேர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீரபாண்டியனுக்குச் சொந்தமான 6 வீடுகளைக் கொண்ட குடியிருப்பிலும், அண்டை வீடுகளிலும் புகுந்து அதிரடி சோதனை செய்து வருகின்றனர். இவர், மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமாருக்குத் தனி உதவியாளராக உள்ளார். மேலும், உதயகுமாருக்குச் சொந்தமாக இலுப்பூர் அருகே மேட்டுச்சாலையில் உள்ள கல்லூரியையும் கவனித்து வருகிறார்.
இந்த சோதனையில் பொருட்கள், ரொக்கம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டனவா என்ற விவரம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆளுங்கட்சி அமைச்சருக்கு நெருக்கமானவரது வீடுகளில் நடந்த ஐடி ரெய்டு, புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




