தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரொனா பரவல் அதிகம்..!
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரொனா பரவல் அதிகமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகரித்துவரும் கொரொனா பரவல் குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் இந்தியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதிக்கு தற்பொழுது கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்துள்ளதாக தெரிவித்தார்.
கொரொனா பரவல் அதிகம் இருக்கக்கூடிய முதல் 10 மாவட்டங்களில் புனே, நாக்பூர், மும்பை, தானே, நாசிக் மற்றும் பெங்களூரு ஆகியவை இடம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மார்ச் 1ஆம் தேதி தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்து 293 என்ற அளவில் இருந்த நிலையில் தற்போது 28 ஆயிரத்து 699 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல பஞ்சாபில் மார்ச் 1ஆம் தேதி 579 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 2,254 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தமட்டில் தினசரி கொரோனா பாதிப்பு மார்ச் 1-ஆம் தேதிக்குப் பிறகு வெகுவாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் கொரொனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 15 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.






