பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்..!
உலகப்புகழ் பெற்ற பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரொனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறாமல் போன பழனி முருகன் கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவை இந்தாண்டு கட்டுப்பாடுகளுடன் நடத்த கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது.
பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவின் கொடியேற்றம் நிகழ்ச்சி பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்றது.
பத்து நாட்கள் நடைபெற உள்ள பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் வருகிற 27ஆம் தேதியும், அதனை தொடர்ந்து 28ஆம் தேதி மலையடிவாரத்திலுள்ள திருவீதியில் பங்குனி உத்திர தினத்தன்று தேரோட்டமும் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கொரொனா தொற்று காரணமாக நடைபெறவில்லை. இந்த நிலையில் கொரொனா தொற்றின் இரண்டாவது அலை ஆங்காங்கே வேகம் எடுத்து வருவதால் இந்த தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளுடன் பங்குனி உத்திரத் திருவிழாவை நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
பக்தர்களைப் பரவசப்படுத்தும் பங்குனி உத்திர திருவிழாவிற்கு லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்ய வருவது குறிப்பிடத்தக்கது.






