சார்ஜர் வெடித்ததால் எரிந்து நாசமான வீடு..!
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் செல்போன் சார்ஜர் வெடித்ததால் குடிசை வீடு ஒன்று பற்றி எரிந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரம் பம்மல் அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் பாரதி தேசிங்குராஜா.
இவருக்கு சொந்தமான குடிசை வீட்டில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை வீட்டில் தங்கியிருந்த மற்ற அனைவரும் வேலைக்காக வெளியே செல்ல ஒருவர் மட்டும் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிய தொடங்கியது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை, இதனால் தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே வீட்டில் இருந்த பணம் துணிமணிகள் ஆகியவை முற்றிலும் எரிந்து சாம்பலாகின. தகவல் அறிந்து விரைந்து வந்த பல்லாவரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டில் இருந்து செல்போன் சார்ஜர் வெடித்ததால் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் உயிர் சேதமோ படு காயம் ஏற்படவில்லை. இதனைத்தொடர்ந்து பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு இளைஞர்களுக்கு ஆறுதல் கூறினார்.






