--- --:--:-- --

அராஜக அரசியல்வாதி ஜோதிமணி… கொதிக்கிறார் காங். மூத்த தலைவர்! ‘கதர் சட்டை’ களுக்குள் கலகம்!!

Jothi mani MP

தேர்தல் நெருங்க, நெருங்க காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல் பகிரங்கமாக வெடிக்கத் தொடங்கி இருக்கிறது. கரூர் எம்.பி.ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று, மூத்த தலைவரான கோபண்ணா ஆவேசமாகக் கூறியுள்ளார்.

 

அரசியல் களத்தில் பிரிக்க முடியாதது, காங்கிரஸும் கோஷ்டிப்பூசலும் என்று சொல்லலாம். அதிலும் குறிப்பாக, தேர்தல் நேரத்தில் சீட் பெறுவதில், மற்ற கட்சிகளில் இல்லாதவகையில் காங்கிரஸில் வெளிப்படையாக மோதல் ஏற்படுவது வாடிக்கை.

 

இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு, 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. அதை பெறுவதற்கு, கட்சிக்குள் இருக்கும் பல்வேறு கோஷ்டித் தலைவர்கள் கோதாவில் இறங்கினர். ஒருவழியாக நேற்றிரவு காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியானது.

 

வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதும் காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்கள் ஆளாளுக்கு அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர். காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத், தேர்தலில் காங்கிரஸ் சீட் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகக்கூறி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

 

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜான்சிராணி, நிலக்கோட்டை தொகுதியில், தனது பாட்டி பொன்னம்மாள், 7 முறை எம்எல்ஏவாக இருந்தபோதிலும் தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்று, கே.எஸ்.அழகிரியை விமர்சனம் செய்தார். அதேபோல், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியும் தன் பங்கிற்கு கருத்து சொல்லி, வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார்.

 

ஜோதிமணி எம்.பி. தனது ட்விட்டர் பதிவில், ”காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி, வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறுகள் நடக்கின்றன. தட்டிக் கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் ரத்தத்தைக் குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலைச் செவி மடுக்கவில்லை.

 

உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண் முன்னால் இழைக்கப்படும் துரோகத்தைக் கண்டு எனது ரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். நடப்பது நடக்கட்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

 

ஆனால், ஜோதிமணியின் பதிவால், மூத்த தலைவர்கள் கடுப்பாகி உள்ளனர். குறிப்பாக கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணா, கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார், ஜோதிமணிக்கு பதிலடியாக, ட்விட்டர் பதிவிட்டுள்ள கோபண்ணா, ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. காங்கிரஸ் கட்சியைக் களங்கப்படுத்துகிற ஜோதிமணி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

கடந்த 2016 கரூர் சட்டப்பேரவைத் தேர்தலில் 401 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பேங்க் சுப்பிரமணியத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக்கூடாது என்று சண்டித்தனம் செய்து பழிவாங்கிய ஜோதிமணி, தொண்டர்களுக்காக ரத்தம் கொதிப்பதாக கூறுவது ஒரு அரசியல் மோசடி.

 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி, வேட்பாளர் தேர்வு பல்வேறு கட்டங்களாக வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்றுள்ளது. தனிப்பட்ட எந்தத் தலைவரும் முடிவெடுக்க முடியாத நிலையில், எந்தத் தவறும் நடக்க வாய்ப்பில்லாத ஜனநாயக நடைமுறையைக் கொச்சைப்படுத்துவது அப்பட்டமான கட்சி விரோதச் செயல் அல்லவா? என்று கோபண்ணா ஆவேசமாக கேட்டுள்ளார்.

 

காங்கிரஸ் கட்சிக்குள் சீனியர் தலைவர்கள் ஆளாளுக்கு முட்டி மோதுவது, தேர்தல் நேரத்தில் அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவை தரும் என்று அக்கட்சி விஸ்வாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon