--- --:--:-- --

எடப்பாடி, ஸ்டாலின், டிடிவி, கமல்… நல்ல நாள் பார்த்து நாளை மனுதாக்கல்!

Nomination

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக தலைவர் டிடிவி, ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர், சுபயோக சுப முகூர்த்த தினமான நாளை, வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட பலரும், நாளை மனுதாக்கல் செய்யவுள்ளனர்.

 

தமிழக சட்டசபைக்கு வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல், கடந்த 12ம் தேதி தொடங்கியது; வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வரும் 19ம் தேதி கடைசி நாளாகும். முதல் நாளில் மனுதாக்கல் செய்ய பெரும்பாலானோர் ஆர்வம் காட்டவில்லை. எனினும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

 

இந்த நிலையில், சுபமுகூர்த்த நாளான நாளை, முதல்வர் பழனிச்சாமி, ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். மனு தாக்கலுக்காக இன்றிரவு சென்னையில் இருந்து விமானத்தில் கோவைக்கு செல்லும் அவர், அங்கிருந்து காரில் சேலம் செல்கிறார்.

 

நாளை காலை, சொந்த ஊரான சிலுவம்பாளையத்துக்கு செல்லும் முதல்வர் பழனிச்சாமி, அதை தொடர்ந்து அப்பகுதியில் இருக்கும் பெரியசோரகை சென்றாயபெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுகிறார். அங்கிருந்து பிரசாரத்தை தொடங்குகிறார். கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி இதே கோவிலில் தான் சாமி தரிசனம் செய்துவிட்டு, முதல்வர் பழனிச்சாமி பிரசாரத்த ஆரம்பித்தார்.

 

தொடர்ந்து, எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் பழனிச்சாமி வேட்புமனு தாக்கல் செய்கிறார். மாலையில் எடப்பாடியில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

 

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். நாளை பகல் 12.30 மணி அளவில், அயனாவரம் பஸ் டெப்போ அருகில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில்,ஸ்டாலின் வேட்பு மனுவை தாக்கல் செய்வார். நாளை மாலை திருவாரூர், மன்னார்குடியில் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

 

அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நாளை (திங்கட் கிழமை) மதியம் 1.30 மணியளவில் கோவில்பட்டி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணனிடம் வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளார்.

 

கோவை தெற்கு பகுதியில் போட்டியிடும் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன், நாளை வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை காலை 9.30 மணிக்கு கமல்ஹாசன் கோவை செல்கிறார். அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

 

அதை தொடர்ந்து, பகல் 11.30 மணியளவில் கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில், கமல்ஹாசன் வேட்பு மனுதாக்கல் செய்கிறார். நாளை மாலை 6 மணியளவில் கோவை ராஜவீதி தேர்நிலை திடலில் கமல்ஹாசன் பிரசாரத்தை தொடங்குகிறார்.

 

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். திருவொற்றியூரில் உள்ள மண்டல அலுவலகத்தில் நாளை வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். நாளை நல்லநாள் என்பதால் ஏராளமான வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தேர்தல் அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கு போதிய இருக்கை, குடிநீர், பந்தல் வசதி அமைக்கப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon