--- --:--:-- --

சட்டசபைத் தேர்தல் திருவிழா தொடக்கம்… இன்றுமுதல் வேட்புமனு தாக்கல்!

Nomination

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது; இது வரும் 19ம் தேதி நிறைவு பெறுகிறது. தேர்தல் திருவிழா இன்று முறைப்படி தொடங்குவதால், கட்சியினர் உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் காணப்படுகின்றனர்.

 

தமிழகத்தில் 16வது சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம்(ஏப்ரல்) 6ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பு, கடந்த மாதம் 26ம் தேதி வெளியானது. தேர்தல் திருவிழாவின் முதல் நிகழ்வான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அழிப்பு, பொது இடங்களில் இருந்த கட்சி கொடி கம்பங்கள் அகற்றம், விளம்பர பதாகைகள் அகற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. மேலும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வருபவர்கள் 100 மீட்டருக்கு முன்னதாகவே தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்ற வகையில் எல்லைக்கோடுகள் வரையப்பட்டுள்ளது. அந்த இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக இரும்பு தடுப்புகளை அமைத்தனர்.

 

வேட்புமனுவினை வேட்பாளரோ அல்லது அவரை முன் மொழிபவர்கள் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு பெறப்படும் அலுவலகம் 100 மீட்டர் சுற்றளவிற்கு அதிகபட்சமாக 2 வாகனம் மட்டுமே வர வேண்டும். வேட்புமனு தாக்கலின்போது தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் வேட்பாளருடன் 2 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஊர்வலமாக வரக்கூடாது. முக கவசம் அணிய வேண்டும்.

 

அத்துடன், வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே, வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வரும் 13, 14-ந்தேதி விடுமுறை நாட்கள் ஆகும். அன்றைய தினங்களில் வேட்பு மனுக்கள் வாங்கப்படாது.

தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்கள் வைப்பு (டெபாசிட்) தொகையாக பொதுப்பிரிவினர் ரூ.10 ஆயிரமும், பட்டியலின பிரிவினை சேர்ந்தவர்கள் (சாதி சான்றிதழுடன்) ரூ.5 ஆயிரமும் செலுத்த வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 19-ம் தேதி ஆகும். தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 20-ம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை திரும்ப பெறவேண்டிய கடைசி நாள் வரும் 22ம் தேதி ஆகும். மேலும் அன்றைய தினம் வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியாகும்.

 

தமிழக சட்டசபை தேர்தலுடன் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதற்கும் வேட்பு மனுக்களை திரும்ப பெற 22-ம் தேதி கடைசி நாள். அன்றைய தினம் இந்த தொகுதிக்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது.

 

வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கினாலும், நாள், நட்சத்திரம், நல்ல நேரம், சுப முகூர்த்தம் பார்த்து பெரும்பாலானோர் வேட்புமனு தாக்கல் செய்வது நடைமுறையாக இருக்கிறது. எனவே, இன்று ஒருசில சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 15ம் தேதி (திங்கட்கிழமை) வளர்பிறை சுபமுகூர்த்தம். எனவே, அன்றைய தினம்தான் பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon