மு.க. ஸ்டாலினின் பிரசார பயணம் திடீர் ரத்து… காரணம் இதுதான்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வரும் 12, 13 தேதிகளில் மேற்கொள்ளவிருந்த 6 ஆம் கட்ட தேர்தல் பிரச்சார பயணத்தை ரத்து செய்துள்ளார். தமிழகம் முழுவதும் செல்லும் வகையில் அவரது பிரசார திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில், நாளை மறுநாள் (மார்ச் 12) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. எனவே, வேட்பாளர்களை இறுதி செய்து பட்டியலை வெளியிட்டு, பிரசாரப்பணிகளை முடுக்கிவிட அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
சுபமூகூர்த்தம், பிரதோஷம், புதன்கிழமை என்று பல சிறப்புகள் உள்ள இன்று, திமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியிட உள்ளன. பாஜக – பாமக ஆகியன, தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அறிவிக்க உள்ளன. சென்னை அறிவாலயத்தில் இன்று நண்பகல், திமுக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இணைந்து, வேட்பாளர்கள் பட்டியலை ஸ்டாலின் வெளியிடுகிறார்.
இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் தொடங்கும் மார்ச் 12 ,13 ஆகிய தேதிகளில், மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் ,நாமக்கல், கரூர் ,திண்டுக்கல், மதுரையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் நடக்கவிருந்தது. ஆனால் தேர்தல் நெருங்கி வருவதால், தமிழகம் முழுவதும் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
அதற்கேற்ப, பயணத்திட்டத்தை மாற்றியமைக்க ஏதுவாக, இந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் வருகையையொட்டி, சேலம், நாமக்கல், கரூர் மாவட்ட செயலாளர்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், அவரது பயணம் ரத்து செய்திருப்பது, அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




