--- --:--:-- --

திமுகவுக்கான ஆதரவை வாபஸ் பெற்றார் கருணாஸ்… சீட் தராததால் விரக்தி!

Karunas 02

அதிமுக அணியில் இருந்து வெளியேறி திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்த முடிவை திரும்பப் பெறுவதாக, நடிகர் கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் திடீரென அறிவித்துள்ளனர்.

 

அதிமுக கூட்டணியில் இணைந்து கடந்த தேர்தலில் போட்டியிட்ட முக்குலத்தோர் புலிப்படை கட்சித்தலைவர் கருணாஸ், கடந்த முறை திருவாடானை தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முறை சீட் எதிர்பார்த்து காத்திருந்த கருணாஸும், மனிதநேய ஜனநாயக் கட்சி தலைவர் தமீமும் அன்சாரி ஆகியோர், அதிமுக தலைமை அழைக்காததால் அதிருப்தி அடைந்தனர்.

 

இதையடுத்து, கடைசி நேரத்தில் அதிமுக அணியில் இருந்து இருவரும் விலகினர். பின்னர், எடப்பாடி பழனிசாமி எங்களை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினர். பின்னர், முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் 84 இடங்களில் தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார்.

 

ஆனால், திடீரென தங்கள் முடிவில் இருந்து பின்வாங்கிய கருணாஸ், திமுகவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக கூறினார். அதேபோல் தமிமும் அன்சாரியும் திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் கடிதத்தை அக்கட்சியிடம் நேற்று அளித்திருந்தார். எனினும், திமுக தரப்பிலும் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு கருணாசையோ, தமிமும் அன்சாரியையோ அழைக்கவில்லை.

 

இதனால், இருவரும் மீண்டும் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளானார்கள். இதையடுத்து, தனது கட்சி நிர்வாகிகளுடன் இன்று கருணாஸ் திடீர் ஆலோசனை நடத்தினார். அதன் முடிவில், முக்குலத்தோர் புலிப்படை கட்சி திமுகவுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்தார். திமுக கூட்டணியில் தங்களுக்கு சீட் ஒதுக்காததால், ஆதரவை திரும்பப் பெறுவதாக அவர் விளக்கம் அளித்தார்.

 

அதேபோல் மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியும், திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக எடுத்த முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களில் இவர்கள் இருவரும் திடீரென ஒவ்வொரு அணியாகச் சென்று, சீட் கிடைக்காமல் ஏமாற்றத்துக்குள்ளாகி விரக்தியில் உள்ள நிலையில், அடுத்து கமல்ஹாசனின் அணியில் அல்லது டிடிவி தினகரன் அணியில் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon