--- --:--:-- --

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 இடங்கள்! கையெழுத்தானது உடன்பாடு!!

Azhagiri 02

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது; காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு கட்சித் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

 

திமுக அணியில், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி உடன்பாடு ஏறக்குறைய இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு தலா 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

 

நேற்று மாலை மதிமுக உடன் திமுக தொகுதி பங்கீடு செய்து கொண்டது. அதன்படி, வைகோவின் மதிமுக-வுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த 6 இடங்களிலும் உதய சூரியன் சின்னத்தில் மதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் மட்டுமே இன்னமும் உடன்பாடு எட்டப்படாத நிலை இருந்தது.

 

தி.மு.க. தரப்பு குறைவான தொகுதிகளை ஒதுக்க முன்வந்ததால், தொகுதி பங்கீடு தொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி அவசரமாக செயற்குழு கூட்டத்தை கூட்டியது. அந்த கூட்டத்தில் நிர்வாகிகளிடம் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து கேட்ட, கண்ணீரும் விட்டார். இதற்கிடையே, நேற்றிரவு கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் தரப்பிலும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்பு கொண்டனர். பிரசார கூட்டத்தை ரத்து செய்து, இதுபற்றி கமல் ஆலோசனை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.

 

இதனால் காங்கிரஸ் என்ன முடிவு எடுக்க போகிறது என்று அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இச்சூழலில், நேற்றிரவு 11 மணி அளவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த வருமாறு காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்றனர்.

 

இதன் தொடர்ச்சியாக, இன்று காலை காங்கிரஸ் தலைவர் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்தனர். அதை தொடர்ந்து திமுக கூட்டணியில் இரு கட்சிகளிடையே உடன்பாடு கையெழுத்தானது. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மதச்சார்பின்மை வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தீவிரமாக வெயல்படுகிறோம். சமூகநீதிக்கு எதிராக இருக்கும் சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே இலக்கு என கூறினார்.

 

திமுகவுடனான தொகுதி உடன்பாடு மகிழ்ச்சியையும் ,எழுச்சியையும் ஏற்படுத்துகிறது என்ற அவர், மிகவும் மகிழ்ச்சியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறோம். அரசியலில் ஏற்ற இறக்கங்கள் என்பது இயல்பு என தொகுதி எண்ணிக்கை குறித்து கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon