தலைவருக்கு எதிராக தொண்டர்கள்! உருவ பொம்மை எரிப்பு!! காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு
பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தொண்டர்கள் அவரது உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இதனால், காங்கிரஸ் கட்சி உள்விவகாரம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் அறக்கட்டளை சார்பில் நடக்கும் சாந்தி சம்மேளனம் நிகழ்ச்சி, ஜம்முவில் அண்மையில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைமை தேவை என சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 மூத்த தலைவர்களில் பலர் பங்கேற்று பேசினர்.
மூத்த தலைவர் கபில் சிபல் பேசும்போது, காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும். விமானத்தை அனுபவம் வாய்ந்தவரால் மட்டுமே ஓட்ட முடியும். ஆனால், அதன் என்ஜினில் ஏற்படும் கோளாறுகளை, அதன் பொறியாளர்தான் சரி செய்ய முடியும். குலாம் நபி ஆசாத் அனுபவம் வாய்ந்தவர். அவர், சிறந்த பொறியாளர். அவரது பணியை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா பேசுகையில், கடந்த 1950 ஆம் ஆண்டுக்கு பின்னர், மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பிரதிநிதி யாரும் இல்லை என்ற நிலை வந்தது கிடையாது. ஆனால், இப்போது அப்படியல்ல. இந்த தவறு சரி செய்ய வேண்டும். கடந்த பல ஆண்டுகளில் காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது என்றார்.
இன்னொரு மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் பேசும்போது, கடந்த 5- 6 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பிரச்சனைகள், தேவைகள், வேலைவாய்ப்பின்மை குறித்து அதிகம் பேசப்பட்டுள்ளது. ஜம்மு அல்லது காஷ்மீர் அல்லது லடாக் என எந்த பகுதியிலும் வசிக்கும் அனைத்து மக்கள், மதம் ஆகியவற்றை மதிக்கிறோம். அனைவரையும் சமமாக நடத்துகிறோம். இதுவே நமது பலம்; அது தொடரும் என்றார்.
அத்துடன், பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசினார். மோடி தனது கடந்த காலம் பற்றி வெளிப்படையாக பேசினார். தேநீர் விற்றவர் என்ற உண்மையை கூறினார். உலகிற்கு தன்னுடைய பின்னணியை அவர் மறைக்கவில்லை என, குலாம் நபி ஆசாத் பேசினார்.
இந்நிலையில், குலாம் நபி ஆசாத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்முவில் அக்கட்சியின் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அவரது உருவ பொம்மையை எரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், கட்சிக்கு ஆதரவளிக்காமல் கட்சியை குலாம் நபி ஆசாத் பலவீனப்படுத்தி கொண்டிருப்பதாக கூறியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




