110 வயது மூதாட்டிக்கு உதவிய பெண் காவலர்கள்..!
வந்தவாசியில் பாதுகாப்பில் ஈடுபட்ட மூன்று பெண் காவலர்கள் மனிதநேயத்துடன் 110 வயது முதிர்ந்த மூதாட்டிக்கு உதவி செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஒரு நிகழ்ச்சிக்காக பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது பேருந்து நிலையத்திற்கு 110 வயது மூதாட்டி ஆதிலட்சுமி தன் 78 வயது மகன் ஜானகிராமன் உடன் வந்தார். இவர்கள் மேல்மருவத்தூர் சென்று விட்டு சொந்த ஊரான அவலூர்பேட்டை செல்ல வந்தவாசி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது வயது முதிர்வு காரணமாகவும், பசி காரணமாகவும் மூதாட்டி ஆதிலட்சுமி நடக்க முடியாமல் திணறி உள்ளார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த ஜெயசித்ரா கலையரசி கலைமதி ஆகியோர் மூதாட்டியை கைத்தாங்கலாக அழைத்து சென்று ஒரு ஓரத்தில் நிழலில் அமர வைத்தனர்.
பின்னர் அவர்களை ஆசுவாசப் படுத்தி உணவு மற்றும் குடிதண்ணீர் வழங்கியுள்ளனர். தொடர்ந்து உணவு சாப்பிட்டதும் முதியவர்கள் இருவரையும் சொந்த ஊருக்கு அவர்கள் செல்லவேண்டிய பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர்.






