--- --:--:-- --

அரசியலுக்கு சசிகலா முழுக்கு? அதிமுகவுடன் அமமுக இணைப்பு!? திரைமறைவில் ரகசிய பேச்சு!!

25

சசிகலாவின் வருகை, அரசியலில் சூறாவளியை ஏற்படுத்துமோ என்று பலரும் எதிர்பார்த்துள்ள நிலையில், அவரோ அதில் ஆர்வமில்லாமல் இருப்பதாக வெளியாகும் தகவல்கள், அதிமுகவினருக்கு நிம்மதியை தந்துள்ளது. மறுபுறம், டிடிவி தினகரனின் அமமுகவை அதிமுகவுடன் இணைக்கும் முயற்சிகளும் திரைமறைவில் நடப்பதாக கூறப்படுகிறது.

 

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் தண்டனையை அனுபவித்து வந்த சசிகலா, சுதந்திரப் பறவையாக, வரும் 8ம் தேதி சசிகலா சென்னைக்கு திரும்புகிறார். சிறையில் இருந்து ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட்டாலும், அதற்கு முன்னே கொரோனாவால், அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பெங்களூரு விக்டோரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

 

உடல் நலம் முழுமையாகத் தேறியதை அடுத்து, ஜனவரி 31ஆம் தேதி விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, மருத்துவர்களின் அறிவுத்தலின்படி, பெங்களூரு நந்திமலை அருகில் உள்ள கோடாகுருக்கி பண்ணை வீட்டில் இருக்கிறார். சசிகலாவுடன் டாக்டர் வெங்கடேஷ், அவரது மனைவி ஹேமா, விவேக், உதவியாளர் கார்த்திகேயன், டாக்டர், செவிலியர்கள் இருப்பதாக தெரிகிறது.

 

முதலில், பிப்ரவரி 7ஆம் தேதி சென்னை திரும்புவதற்கு சசிகலா திட்டமிட்டிருந்தார். ஆனால், ஜோதிடர்கள் குறித்துக் கொடுத்தபடி, பூராடம் நட்சத்திரம் கொண்ட சுப முகூர்த்த நாளான 8ம் தேதிக்கு தனது வருகையை மாற்றி அமைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்ததில் இருந்து தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. குறிப்பாக, அதிமுக வட்டாரங்களில் ஒருவித இறுக்கமும், பதற்றமும் காணப்படுகிறது.

 

அதிமுகவில் இருந்து முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பெருந்தலைகள், சசிகலா முகாமுக்கு தாவத் தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தினமும் வெளியாகி பரபரப்பை கிளப்ப, தேர்தலுக்கு முன்பே கட்சி கலகலத்துவிடுமோ என்று எடப்பாடி பழனிச்சாமியும், ஒ. பன்னீர்செல்வமும் கவலையில் ஆழ்ந்தனர். அதேநேரம், எதுவானாலும் சரி, இறுதிவரை போராடுவது என்ற முடிவோடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், ரகசியமாக சில வேலைகளை செய்து வருகிறாராம்.

 

ஆனால், அதிமுக தலைமைக்கு நிம்மதி தரும் சில தகவல்கள் போய்ச் சேர்ந்திருப்பதாக, தலைநகர செய்தியாளர்கள் தற்போது கிசுகிசுக்கின்றனர். அதாவது, சென்னை திரும்பிய சசிகலா, அரசியல் நடவடிக்கைகளில் இனி ஈடுபட வாய்ப்பில்லை என்பதுதான் அந்த தகவல்! சிறையில் இருந்து வெளியில் வந்த சசிகலா, தனது குடும்பத்தார் உள்ளிட்ட யாருடனும் அதிகம் பேசவில்லையாம். யாருமே அரசியல் பக்கம் தலைகாட்ட வேண்டாம்; பேசாமல் அவரவர் வேலைகள், தொழில்களை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள் என்று உறவினர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறாராம்.

அதாவது, சென்னை திரும்பிய பிறகு இனி அரசியல் நடவடிக்கைகளில் தான் ஈடுபடப் போவதில்லை என்பதை சசிகலா மறைமுகமாக தெரிவித்துவிட்டதாக, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மேலும், தற்போதுள்ள அதிமுக தலைமையுடன் இனி எந்த பிரச்சினையோ, மோதல் போக்கோ கையாள வேண்டாமென்றும், சுமூகமாக இருந்துவிடலாம் என்றும் சசிகலா சொல்லி இருக்கிறாராம்.

 

இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. முன்புபோல் சசிகலாவின் உடல் நலம் ஒத்துழைப்பதில்லை; சிறை வாழ்க்கை அவரை நன்கு பக்குவப்படுத்திவிட்டதாக கூறுகிறார்கள். அவரிடம் முன்பு இருந்த கோபமோ, ஆவேசத்தையோ காண முடிவதில்லை; ஒரு துறவியை போல் அதிகம் பேசாமல் மவுனமாகவே பெரும்பாலும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

 

எனினும், அதிமுகவை விட்டு வெளியே வந்து தனக்காக அரசியல் செய்து வரும் டிடிவி தினகரனை அப்படியே விட்டுவிட சசிகலாவுக்கு மனமில்லை. அவருக்கு அரசியலில் நிரந்தரமான, வலுவான ஒரு இடத்தை ஏற்படுத்தி தர வேண்டுமென்று சசிகலா விரும்புகிறாராம். எனவே, அதிமுக தலைமைக்கு சசிகலா தகவல் ஒன்றை சொல்லி இருப்பதாக, பேச்சு அடிபடுகிறது.

 

அதன்படி, ‘இனி நான் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடாமல் ஒதுங்கிக் கொள்கிறேன், ஆனால், ஒரு நிபந்தனை! அதாவது, டிடிவி தினகரனை, அதிமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன், அவரது ஆதரவாளர்களுக்கு குறைந்தது 30 இடங்களை, அவர் கேட்டும் தொகுதிகளில் தர வேண்டும் என்று சசிகலா தரப்பில் கூறப்பட்டுள்ளதாம்.

 

தீய சக்தியான திமுக, எந்த வகையிலும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று, போகுமிடம் எல்லாம் தினகரன் பேசிவருகிறார். அதேபோல், அதிமுகவின் முனுசாமியும், வருத்தம் தெரிவித்தால் தினகரனை கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்று கூறியிருப்பது ஆகியவற்றின் பின்னணி இதுதான் என்று, அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

 

சசிகலா தரப்பில் இருந்து கிடைத்துள்ள இந்த புதிய திட்டம், அதிமுக மூத்த தலைவர்களுக்கும் நம்பிக்கையும், நிம்மதியையும் தந்திருப்பதாக சொல்கிறார்கள். காரணம், வலுவான திமுகவை எதிர்க்க, டிடிவி தினகரனின் வருகை நிச்சயம் உதவும் என்பதுதான். டெல்டா மாவட்டங்களில் தினகரனுக்கு உள்ள கணிசமான செல்வாக்கு, வரும் தேர்தலில் அதிமுகவின் வெற்றியை பாதிக்கலாம் என்று, உளவுத்துறை அறிக்கை சொல்லி இருக்கிறதாம். எனவே, தினகரன் அதிமுகவுக்கு திரும்பினால், வெற்றி வாய்ப்பு பாதிக்காது என்று அதிமுக தலைமை கருதுகிறது.

 

அத்துடன் மத்தியில் உள்ள பாஜகவும், அமமுகவை அதிமுகவில் இணைத்தால் மட்டுமே திமுகவின் வெற்றியை தடுக்க முடியும் என்று தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், சசிகலாவின் இந்த யோசனையை அதிமுக மூத்த தலைவர்கள் பரிசீலிக்க தொடங்கி இருக்கிறார்களாம். அதேநேரம், தினகரனை கட்சிக்குள் சேர்த்தால், எதிர்காலத்தில் அதிமுகவை அவர் கைப்பற்றிவிடுவாரோ என்ற கவலையும் அதிமுக தலைவர்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால், அந்த மாதிரி எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக பாஜக தலைமை உறுதி தந்திருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.

 

எனவே, டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்கும் விஷயத்தில் தலைமையிடம் இருந்து பதிலுக்காக சசிகலா காத்திருக்கிறார். சாதகமான பதில் கிடைத்தால், உடனே அமமுக – அதிமுக இணைப்பு நடத்திவிடுவது என்ற திட்டம் இருக்கிறதாம். அடுத்த வாரம் தமிழகம் வரும் பாஜக தலைவர்கள், இந்த விஷயத்தில் சுமூக முடிவை ஏற்படுத்தி, ‘சுபம்’ போட்டுச் செல்வார்கள் என்று தெரிகிறது.

 

 

அதிமுக அவசர ஆலோசனை! – பெங்களூருவில் இருந்து வரும் 8ஆம் தேதி, சசிகலா சென்னை வரவுள்ள நிலையில், அதிமுகவினர் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் இன்றே முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களுடன் மாலை 5 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

 

பிப்ரவரி 8 மற்றும் 9ஆம் தேதிகளில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் பகுதிகளில் முதல்வரின் பிரச்சாரம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அதிமுக நிர்வாகிகள் செய்து வந்தனர். ஆனால், சசிகலாவின் வருகை 7 ஆம் தேதிக்கு பதிலாக 8ஆம் தேதி என மாற்றப்பட்டதால், சசிகலா வருகையும், வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் தேர்தல் பிரச்சாரமும் ஒரே நாளில் நடைபெறும் நிலை ஏற்பட்டது.

 

இது, இரு தரப்புக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் என்று கருதிய முதல்வர் பழனிச்சாமி, தனது பிரச்சார தேதியில் மாற்றம் செய்து 8-ம் தேதிக்குப் பதிலாக வரும் 9-ம் தேதிக்கு மாற்றியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon