கோவை : சிக்காரம்பாளையம் ஊராட்சியின் நாற்றங்கால் பண்ணையில் நாற்று விற்பனை.மாவட்ட ஆட்சியர் ராசாமணி துவக்கி வைத்தார் !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிக்காரம்பாளையம் ஊராட்சியில் நாற்றாங்கால் பண்ணையில் நாற்று விற்பனையினை மாவட்ட ஆட்சியர் ராசாமணி துவக்கி வைத்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்காரம்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2020-21ன் கீழ் ரூ.9.63 லட்சம் மதிப்பில் நாற்றங்கால் பண்ணை கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி தொடங்கப்பட்டது.
இங்கு கறிவேப்பிலை, குமிழ்,கொடுக்காப்புளி, வாகை,மலை நெல்லிக்காய், இலுப்பை, சவுக்கு, சீதாப்பழம், கொய்யாப்பழம், தேக்கு, நாவல், எலுமிச்சை, பப்ளிமாஸ், வேம்பு, புளியமரம், பனைமரம், பலாமரம், செம்மரம், ஆலமரம், பூவரசன், மலைவேம்பு, வில்வமரம்,தைல மரம், சந்தனமரம் உள்ளிட்ட 40 வகையான மரக்கன்றுகள் 6 மாதத்தில் 2 அடி உயரத்திற்கு மரங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
இதற்காக மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலும், கல்லாறு தோட்டக்கலை பண்ணையிலும் உரிய ஆலோசனைகளை பெற்றும் இதற்கு தேவையான உரம் மற்றும் மண் ஆகியவற்றை பதப்படுத்தியும்,குளோனிங் முறையிலும் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன.அதனை தொடர்ந்து நாற்றங்கால் பண்ணையில் வளர்க்கப்பட்ட நாற்றுக்களின் விற்பனையை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு சிக்காரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரா, சைலஜா, வட்டாட்சியர் சாந்தாமணி,ஊராட்சி மன்ற துணைத்தலைவர் யுவராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் ராசாமணி பண்ணையில் பணிபுரிந்து வந்த நூறு நாள் வேலை செய்யும் பணியாளர்களிடம் நலம் விசாரித்ததோடு,சம்பளம் நேரத்திற்கு சரியாக வருகிறதா ? என கேட்டறிந்தார்.அதற்கு பணியாளர்கள் இந்த மாத சம்பளம் வரவில்லை என கோரிக்கை வைத்தனர்.அதற்கு மாவட்ட ஆட்சியர் அடுத்த மாதத்தில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் சம்பளம் வருவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மாவட்ட ஆட்சியர் நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களுடன் சகஜமாக பேசியதால் பணியாளர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.






