அமித் ஷாவிடம் மூன்று மனு அளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!
நதிநீர் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி மூன்று மனு அளித்துள்ளார். சென்னை நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள அமித்ஷாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது தமிழக அரசு சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மூன்று மனுக்கள் அமித்ஷாவிடம் அளிக்கப்பட்டன. அதில் காவிரி- குண்டாறு, கோதாவரி- காவிரி ஆகிய நதிகள் இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு 10 ஆயிரத்து 700 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கான நிதியை விரைந்து விடுவிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தை மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்துவது என்ற அடிப்படையில் மத்திய அரசு 50 சதவீத பங்கு முதலீட்டை வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி, விருதுநகரில் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்க தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியை அளிக்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு அறிவுறுத்துமாறு சென்னை அருகே மருத்துவ உபகரணங்கள் பூங்கா அமைக்கவும், மத்திய அரசு உதவி அளிக்கும் படியும் முதலமைச்சர் சார்பில் அமைச்சரிடம் கோரப்பட்டுள்ளது.






