விசாரணைக் கைதி மரணம் காவல் துறையினர் காவலில் நடைபெறவில்லை..!
விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்ட விசாரணைக் கைதி மரணம் காவல் துறையினர் காவலில் நடைபெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த வியாபாரி செல்வமுருகன் திருட்டு வழக்கு தொடர்பாக நெய்வேலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த 4 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நெய்வேலி காவல்துறையினர் தாக்கியதே தனது கணவரின் மரணத்திற்கு காரணம் என்றும் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரியும் செல்வ முருகனின் மனைவி பிரேமா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழிகாட்டுதலின்படி மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றதாகவும் அவை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இந்த மரணம் காவல் துறையினர் காவலில் நடைபெறவில்லை எனவும் அரசியல் நோக்கத்திற்காக கட்டுக் கதைகள் புனையப் படுவதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இந்த வழக்கில் சிபிசிஐடியை எதிர் மனுதாரராக சேர்க்கும்படி மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை குறித்து தமிழக அரசும், சிபிசிஐடி யும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.






