“டீல் ஓகே!!” பாஜகவில் ஐக்கியமாகிறார் குஷ்பூ!! ஒரே ஒரு கோரிக்கை நிறைவேறினால் நடிகர் கருணாஸும் இணைய விருப்பம்!!
கடந்த ஒரு வருட காலமாகவே நடிகை குஷ்பூ பாஜகவில் இணையப் போவதாக பேச்சு அடிபட்டு அதற்கு அவர் றுப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று அது உண்மையாகி உள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் இணைய உள்ளார். நடிகர் கருணாஸ் எம்எல்ஏவும் தமது ஒரே ஒரு கோரிக்கையை நிறைவேற்றினால் தமது கட்சியை பாஜகவுடன் இணைக்க தயார் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எப்படியாவது காலூன்றியே தீருவது; தாமரையை மலரச் செய்து விடுவது என கங்கணம் கட்டி தீவிரமாக செயல்பட்டு வருகிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன். கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு மற்றும் தொண்டர்கள் பலம் இருக்கிறதோ இல்லையோ, மாற்றுக் கட்சி, பொது வாழ்க்கையில் இருப்போர், உயர் அரசுப்பொறுப்பு வகித்த, வகிக்கும் பிரபலங்கள் மற்றும் திரையுலக புள்ளிகள் பலரை கட்சியில் இணைக்கும் பணியில் எல்.முருகன் தீவிரம் காட்டி வருகிறார்.

அந்த வரிசையில் தமிழகத்தில் இருந்து மேலும் ஒரு திரையுலக மற்றும் அரசியல் பிரபலம் பாஜகவில் இணையப் போகும் செய்திதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் வேறு யாருமல்ல குஷ்பூ தான். காங்கிரசின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் என்ற உயர் பொறுப்பு வகித்து வரும் குஷ்பூ, பாஜகவில் இணையப் போகிறார் என கடந்த ஒரு வருடமாகவே திடீர் திடீரென பரபரப்பு கிளம்புவதும், அதனை அவர் மறுப்பதுமாகவே இருந்து வந்தது.
கடந்த வாரம் கூட சென்னையில் நடந்த காங். கட்சி ஆர்ப்பாட்டத்தில் மேடை ஏறிய குஷ்பூ, நான் காங்கிரசில் தான் இருக்கிறேன் என ஆவேசம் காட்டினார்.இந்நிலையில் நேற்று இரவு திடீரென விமானம் ஏறி டெல்லிக்குப் பறந்தார். இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் முன்னிலையில் அக்கட்சியில் இணைகிறார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த குஷ்பூ, முதலில் திமுகவில் இணைந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு வந்தார். குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி கொடுத்து அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து குஷ்பு கருத்து தெரிவித்தபோது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியம் ஏற்பட்டது.
ஆனால் அது அவரது அரசியல் பாதை பாஜகவை நோக்கி திரும்புவதற்கான தொடக்கப்புள்ளி என்று அப்போது சிலர் யூகித்தனர். அப்போது தன்னை தொடர்புகொண்ட பத்திரிகையாளர்களிடம் இதுபற்றி நான் பதில் கூற மாட்டேன் என்று தொடர்ந்து மௌனம் காத்து வந்தார் குஷ்பு. இந்நிலையில் பாஜகவில் குஷ்புவுக்கு என்ன பதவி வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான நடிகர் கருணாஸும் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றினால் பாஜகவுடன் தமது கட்சியை இணைக்கத் தயார் என கருணாஸ் டிமாண்ட் வைத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





