நெடுஞ்சாலையில் சாலையை கடந்து சென்ற பாம்பு..!

கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முடியாமல் சிரமப்பட்டு இறையை விழுங்கிய மலைப்பாம்பு ஒன்றுக்கு துணிந்து சென்று உதவியுள்ளார் ஈர மனம் கொண்ட நபர் ஒருவர்.

 

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே நேற்றிரவு 11 மணியளவில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் சுமார் 12 அடி நீளமுள்ள மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க முற்பட்டது. இறையை விழுங்கி இருந்ததால் வேகமாக அதனால் இயங்க முடியவில்லை.

 

மிகவும் மெதுவாகவே ஊர்ந்து கொண்டிருந்தது. அதை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அதிர்ச்சியடைந்து வாகனங்களை நிறுத்தினர். பாம்பை பார்த்து அனைவரும் அச்சம் கொண்டிருந்த வேளையில் ஒருவர் மட்டும் துணிந்து சென்றே பெரிய கம்பை எடுத்துக்கொண்டு பாம்புடன் சென்றார்.

 

நெடுஞ்சாலை வாகனங்கள் எதுவும் மலைப்பாம்பு மீது ஏறாத வண்ணம் கையில் கம்புடன் அதற்கு காவலாக நின்றார். மேலும் பாம்பு சரியான திசையை நோக்கி செல்லும் வகையில் கம்பால் அதை நகர்த்தி விட்டார்.

 

அதன் பிறகு மலைப்பாம்பு மெதுவாக ஊர்ந்து சாலைக்கு அருகில் இருந்த புதருக்குள் நுழைந்தது. சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மலைபாம்பு சாலையை கடந்ததால் மேட்டுப்பாளையம் சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Leave a Reply