கொரோனா ஊரடங்கு : கடன் தவணை சலுகை காலத்திற்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி..! உச்சநீதிமன்றத்தில் பணிந்தது மத்திய அரசு!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


கொரோனா காலத்தில் 6 மாதத்திற்கு கடன் தவணை ஒத்திவைக்கப்பட்ட காலத்திற்கு வங்கிகள் வட்டிப் பாக்கிக்கு வட்டி வசூலித்தது தள்ளுபடி செய்யப்படும். மேலும் வட்டி விதிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது. இதனால் பலர் வேலை இழப்பு, வருமானம் இழப்புக்கு ஆளான நிலையில், வங்கிகளில் வீட்டுக் கடன், தொழில் கடன், தனிநபர் கடன் பெற்றோர் மாதாந்திர தவணை செலுத்த சிரமப்பட்ட நிலையில், கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் 6 மாதங்களுக்கு வங்கிக் கடன் தவணைகளைச் செலுத்துவதில் இருந்து மத்திய அரசு விலக்களித்தது.

 

ஆனால், இந்த ஆறுமாத கால தவணைகளுக்கான வட்டிக்கு தனியாக வட்டி விதிக்கப்படும் என வங்கிகள் தெரிவித்ததும், அசல் கணக்கில் அந்த வட்டிக்கு வட்டி தொகையை சேர்த்ததும் பலரை விழி பிதுங்க வைத்து கலக்கமடையச் செய்தது. இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.

 

இந்த வழக்கில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வட்டிக்கு வட்டியைத் தள்ளுபடி செய்ய முடியாது எனத் தெரிவித்திருந்தன. ஆனால் உச்ச நீதிமன்றமோ கடுமை காட்டி, வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

 

இந்நிலையில், 6 மாதத் தவணைப் பாக்கிக்கான வட்டிக்கு, வட்டி விதிக்கப்பட மாட்டாது எனவும் தள்ளுபடி செய்யப்படும் எனவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தற்போது தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில், ரூ. 2 கோடி மதிப்புள்ள கடன் வரை பெற்றிருப்பவர்களுக்கு, மார்ச் முதல் ஆகஸ்ட் கால கடன் தவணைப் பாக்கிகளுக்கான வட்டிப் பாக்கிக்கு வட்டி விதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் ரூ. 5000 கோடி முதல் ரூ.10000 கோடி வரை அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 2 கோடிக்கு மேல் பெரிய அளவிலான தொகையைக் கடனாகப் பெற்றிருப்பவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply