நீட் தேர்வு மையம் ஒதுக்குவதில் குழப்பம்..! மாணவர்கள் வேதனை..!
நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் தேர்வு மையம் ஒதுக்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு நுழைவு அட்டை இன்று வெளியிடப்பட்டது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தலில் ஒரு தேர்வு மையமும் நுழைவு அட்டையில் வேறொரு தேர்வு மையமும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக மாணவர்கள், பெற்றோர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர்.
வேலூரில் உள்ளவர்களுக்கு திருப்பத்தூரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது ஊரடங்கு சூழலில் வெகுதூரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்குவதாக கூறுகின்றனர். தேர்வு மையம் தொலைதூரத்தில் அமைக்கப்பட்டிருப்பதால் பொதுப் போக்குவரத்து இல்லாத சூழலில் தேர்வுக்கு செல்வது கேள்விக்குறியாக இருப்பதாக அரசு பள்ளி மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் சூழலில் நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளுக்காக சுமார் 26 லட்சம் மாணவர்களை தேர்வெழுத பொது இடத்திற்கு வரவழைத்தல் பாதுகாப்பானதா என்ற கேள்வி மாணவர்கள் பெற்றோர்கள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது.






