“பாஜகவுடன் காங். மூத்த தலைவர்கள் ரகசிய கூட்டணி!!” காரிய கமிட்டியில் ராகுல் காந்தியின் பேச்சால் சலசலப்பு..! கபில் சிபல் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு!!
சோனியா காந்திக்கு எதிராக கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடையவர்கள் என ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்ட, காரிய கமிட்டி கூட்டத்தில் சலசலப்பானது. குலாம் நபி ஆசாத், கபில் சிபல் போன்ற மூத்த தலைவர்கள் ராகுலின் பேச்சுக்கு எதிராக கொந்தளித்துள்ளனர்.
நூற்றாண்டைக் கடந்த காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைமை அந்தோ பரிதாபம் என ஆகிவிட்டதாகவே தெரிகிறது. சுதந்திரம் பெற்றது முதல் பெரும் பகுதிகாலம் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், கடந்த 2014, 2019 மக்களவை தேர்தல்களில் படுதோல்வியடைந்து எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் தத்தளிக்கிறது.
2014 தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து கட்சித் தலைவர் பதவியை சோனியா ராஜினாமா செய்தார். பின்னர் 2019 பொதுத் தேர்தலை மனதில் வைத்து ராகுல் காந்தியை தலைவராக்கி கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்சப் பார்த்தும் பாச்சா பலிக்கவில்லை. இதனால் ராகுலும் தலைவர் பதவியை உதறி விட்டு ஓட்டம் பிடித்தார்.
இதனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தலைவர் இல்லாத கட்சியாக காங்கிரஸ் தடுமாறுகிறது. இதனால் புதிய தலைவரை தேர்வு செய்யும் இடைக்கால தலைவராக மட்டும் செயல்படுவதாக கூறி சோனியா காந்தி இந்தப் பதவியில் நீடிக்கிறார். மேலும் நேரு, இந்திரா காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவரையே காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்று சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் பிடிவாதமாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தான் தலைமை மாற்றம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியாவுக்கு எழுதிய கடித விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதற்கு பதிலடியாக சோனியாவும் சம்பந்தப்பட்ட காங். தலைவர்களுக்கு கடிதம் எழுதியதுடன், அவசரமாக கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தையும் இன்று கூட்டுவதாக அறிவித்தார்.
தாம் இடைக்கால தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை. தகுதியான தலைவரை அடையாளம் காணுங்கள் என்றும் சோனியா காந்தி தமது கடிதத்தில் கூறியிருந்தது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் புயல் வீசப் போகிறது என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்த்தபடியே இன்று காலை கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் புயல் கிளம்பியது. கூட்டம் தொடங்கி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் பேசியவுடன், ராகுல் காந்தி பேசியது தான் புயலை கிளப்பியது.
அவர் கூறியது இது தான் : காங்கிரஸ் மேலிடத்துக்கு கடிதம் எழுதிய மூத்த தலைவர்கள் அனைவரும் பாஜகவுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என பகிரங்கமாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதனால் கொந்தளித்து விட்டனர் கடிதம் எழுதிய மூத்த காங்கிரஸ் தலைவர்கள்.
பாஜகவுடன் தொடர்பு என்று நிரூபித்துவிட்டால் அரசியலை விட்டே விலகத் தயார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆவேசமாக தெரிவித்த நிலையில், மற்றொரு மூத்த தலைவரான கபில் சிபல் எழுப்பியுள்ள கேள்வி தான் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
டுவிட்டரில் கபில் சிபல் எழுப்பிய கேள்வியில் கடந்த 30 வருடங்களாக காங்கிரஸ் கட்சிக்காக விசுவாசமாக பணியாற்றி வருகிறேன்.
30 வருடங்களில் பாஜகவிற்கு சாதகமான எந்த ஒரு கருத்தையும் தெரிவித்தது இல்லை .
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்த போது நீதிமன்றத்தில் வாதாடி ஆட்சியை காப்பாற்றினோம். மணிப்பூரில் பாஜக ஆட்சிக்கு வர முடியாமல் தடுத்தோம். இப்படியெல்லாம் பாடுபட்ட எங்களை யா பாஜகவுடன் கூட்டு வைத்திருப்பதாக கூறுவது என கபில் சிபல் கேள்வி எழுப்பி இருப்பது காங்கிரசில் சர்ச்சையை மேலும் வலுவாக்கியுள்ளது.
இதற்கிடையே இன்று பல மணி நேரம் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்ட முடிவில், சோனியாவே கட்சியின் இடைக்கால தலைவராக மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






