கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை முடக்க யூட்யூபில் நிர்வாகத்திற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர். கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டு வீடியோ வெளியிட்டதால் அதை தடை செய்ய கோரி பாஜக வினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த செந்தில் வாசன் என்பவரை கைது செய்தனர். கந்தசஷ்டி வீடியோவை பேசி வெளியிட்ட நபரான சுரேந்தரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கருப்பர் கூட்டம் அலுவலகத்தில் கைப்பற்றிய ஆவணங்களை யூடியூப் நிருவாகத்திற்கு அனுப்பியுள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை முடக்க கூறி பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே கந்தசஷ்டி சர்ச்சையில் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த குகன், சோமசுந்தரம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.