கோவை அரசு மருத்துவமனை,அம்மா உணவகங்களில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர்,எஸ்.பி.வேலுமணி திடீர் ஆய்வு !

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

 

கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 7 ஆம் தேதி தமிழக முதல்வரால் புற்றுநோய்க்கு என்று ரூ.25 கோடி மதிப்பீட்டில் நவீன கதிரியக்க இயந்திரத்துடன் கூடிய சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.அதனை அமைச்சர்கள் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

 

அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்திலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது,அங்கு பணியாற்றும் பணியாளர்களிடம் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றனவா? என்னென்ன வசதிகள் வேண்டும் ? எனவும்,சுகாதாரமான முறையில் தான் உணவு உள்ளதா என்றும் ஆய்வு செய்தார்.

 

அப்போது அங்கு உணவருந்தி கொண்டு இருந்த பொதுமக்களிடமும் உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தனர்.அதனை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உள்ள எலும்பு முறிவு சிகிச்சை மையத்தை பார்வையிட்டு சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர் கூறுகையில்;

 

கடந்த வாரம் தமிழக முதல்வரால் கோவை அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு என்று 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன கதிரியக்க இயந்திரம் காணொலி காட்சி மூலம் துவக்கி வைக்கப்பட்டது.  தற்போது அந்த சிகிச்சை மையத்தை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக இந்த இயந்திரம் மூலம் 21 நபர்களுக்கு சோதனை அடிப்படையில் பரிசோதனைகள் நடை பெற்று வருகிறது.

 

இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் இது போன்ற நிலையில் இருப்பது தமிழ்நாட்டில் தான் அதுவும் சென்னையில் தான் முதன்முறையாக 25 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய்க்கு என்று பிரத்யேக கதிரியக்க சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் தற்போது இந்த சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.பொதுமக்கள் தனியார் மருத்துவமனையில் ஒருமுறை சிகிச்சைக்கு சென்று வருவதற்கு ரூ.2 லட்சம் ஆகும். ஆனால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும்போது தமிழக முதல்வரின் காப்பீடு திட்டத்தின் மூலம் இந்த சிகிச்சையை இலவசமாக பெற முடியும் என்றார்.

 

பின்னர்,கோவை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசுத்துறை உயரதிகாரிகளுடன் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தான ஆய்வுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன்,அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் காளிதாஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

 


Leave a Reply