மின்கட்டண கணக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டி திமுக தலைவர் மு க ஸ்டாலின் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதே போல தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கருப்புச்சட்டை அணிந்து கொண்டு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு வெளியே கருப்புக் கொடியை ஏந்தியபடி வெளியே வந்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். மின் கட்டண கணக்கீடு விவகாரத்தில் குழப்பத்தை தவிர்க்க வேண்டும் என்று சொல்லிய அவர் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க சலுகைகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி சிஐடி காலனியிலும், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேனாம்பேட்டையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன், காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன், திருச்சியில் திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு, விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி என்று மாநிலம் முழுவதும் கருப்பு சட்டை அணிந்தும் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றனர்.