சென்னை ஸ்டான்லி இளம் மருத்துவர் உயிரிழப்பில் மர்மமா? உடலை வாங்க பெற்றோர் மறுப்பு!!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கொரோனா வார்டில் பணிபுரிந்து வந்த இளம் டாக்டர் கண்ணன் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய பெற்றோர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.  இதனால் உடலை வாங்க மறுத்துள்ளதுடன் நீதிமன்றம் செல்லப் போவதாகவும் பெற்றோர், உறவினர்கள் தெரிவித்துள்ளதால் விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.

 

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த 24 வயதே ஆன இளம் மருத்துவர் கண்ணன். எம்.பி.பி.எஸ் முடித்து விட்டு, எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிசிச்சை மருத்துவ பட்ட மேற்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இவர் கடந்த ஒரு மாதமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணிபுரிந்து வந்தார்.

 

நேற்று காலை 5.30 மணியளவில் திடீரென 3-வது மாடியில் இருந்து கண்ணன் கீழே குதித்ததாகவும் படுகாயங்களுடன் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது.

கொரோனா வார்டில் தொடர்ந்து இரவுப் பணியில் இருந்த இளம் மருத்துவரான கண்ணன், அதிக பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்பட்டது. அதே வேளையில் கண்ணனுக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்துள்ள நிலையில் தற்கொலைக்கு வேறு காரணம் உண்டா? என்ற ரீதியிலும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டது.

 

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இளம் டாக்டர் கண்ணனின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோரும், உறவினர்களும் சந்தேகம் எழுப்பியுள்ளதால் இந்த விவகாரத்தில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.தனது மகன் கண்ணன் தைரியசாலி. வேறு பிரச்னைகள் ஏதும் இல்லை. தற்கொலைக்கு வாய்ப்பேயில்லை. அவனது உடலில் ஏற்கனவே காயங்கள் இருந்துள்ளது. மாடியில் இருந்த குதித்ததில் கீழே விழுந்த இடத்தில் ரத்தம் சிந்திக் கிடக்கவில்லை. இதனால் கண்ணன் உயிரிழப்பில் மர்மம் உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் செல்லவும் உள்ளோம் என கண்ணனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

 

மேலும், உரிய விசாரணை நடத்தும் வரை உடலை வாங்கப் போவதில்லை எனவும் உயிரிழந்த இளம் டாக்டர் கண்ணனின் பெற்றோரும் உறவினர்களும் பிடிவாதமாக தெரிவித்துள்ளதால் இந்த உயிரிழப்பு விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.


Leave a Reply