கொரொனாவுக்கு மதுக்கடை விற்பனையாளர் பலியானதால் போராட்டம்..!

டாஸ்மாக் கடையில் பணி புரிந்து கொரொனா தொற்றில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டில் டாஸ்மாக் மதுபான விற்பனையாளர் ஒருவர் கொரொனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.

 

இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மதுபான கடை விற்பனையாளர்கள் போராட்டம் நடத்தினர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பணிபுரிந்த வருவதால் விற்பனையாளர்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டால் மருத்துவ செலவுகளை அரசு ஏற்க வேண்டும். உயிரிழப்பு ஏற்பட்டால் அவரது குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

 

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 88 டாஸ்மாக் கடைகளை மூடி வாணிப கழக மேலாளர் அலுவலகம் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து விற்பனையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 143 அரசு மதுபான கடைகளை இரண்டு மணி நேரம் பூட்டி கடைகளுக்கு முன்பாக நின்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைப்போல காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளையும் இன்று திறக்காமல் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


Leave a Reply