கோவையில் கடந்த சில தினங்களாகவே கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது.கோவை மாவட்டத்தில் இதுவரை 2183 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்று ஒரே நாளில் மட்டும் 139 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று மட்டும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒருபகுதியாக கோவை மாநகரப்பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்கள்,வணிக வளாகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கோவை மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் பகுதியில் இன்று மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத் உத்தரவின் படி பறக்கும் படை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது,காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த இரு செல்போன் கடைகள் போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விற்பனையில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அதனையடுத்து மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகள் அக்கடைகளை மூடி சீல் வைத்தனர்.
மாநகரின் மையப்பகுதியில் செயல்பட்டு வரும் செல்போன் கடைகள் போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்காத காரணத்தால் கடைகளை மூடி சீல் வைக்கப்பட்ட சம்பவம் மற்ற செல்போன் கடை உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.